இம்ரான்கான் - அமெரிக்க அமைச்சர் தொலைபேசி உரையாடலால் சர்ச்சை

சனிக்கிழமை, 25 ஆகஸ்ட் 2018      உலகம்
mike pompeo-imran khan2018-08-25

வாஷிங்டன்,பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றதற்குப் பிறகு, அவருக்கும், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோவுக்கும் இடையே நடைபெற்ற முதல் தொலைபேசி உரையாடல் குறித்து அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை தொடர்பாக, இரு நாடுகளுக்கும் இடையே சர்ச்சை எழுந்துள்ளது.

பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான் கானுடன், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல் முறையாக உரையாடினார்.

இது குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரபட்சமின்றி அனைத்து பயங்கரவாதிகளுக்கும் எதிரான தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று தொலைபேசி உரையாடலின்போது மைக்கேல் பாம்பேயோ இம்ரான் கானிடம் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும், அந்த அறிவிப்பு வெளியான உடனேயே, அதற்கு மறுப்பு தெரிவித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் ஓர் அறிக்கை வெளியிட்டது.

அந்த அறிக்கையில், இம்ரான் - பாம்பேயோ இடையிலான உரையாடல் குறித்து தவறான தகவல்களை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக பாகிஸ்தான் அமைச்சகம் குற்றம் சாட்டியது.

மேலும், அந்த தொலைபேசி உரையாடலில் பயங்கரவாதம் குறித்து பேசப்படவில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவுத துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகமது பைசல் டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், இம்ரானுடனான பாம்பேயோவின் உரையாடல் குறித்த தங்களது அறிக்கையை திரும்பப் பெறப் போவதில்லை என்று அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்து விட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து