முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுற்றுச்சூழலைக் காக்க பேட்டரி வாகனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: பிரதமர் மோடி

சனிக்கிழமை, 8 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, சுற்றுச்சூழலுக்கு ஊறு விளைவிக்காத பேட்டரி வாகனங்களை மேம்படுத்துவதற்கும், சந்தைப்படுத்துவற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

போக்குவரத்தை மேம்படுத்துவது தொடர்பான சர்வதேச மாநாடு டெல்லியில்  தொடங்கியது. உலகின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களின் தலைமை பிரதிநிதிகளும், முதலீட்டாளர்களும் அதில் கலந்துகொண்டனர்.

அவர்களைத் தவிர மத்திய அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். மாநாட்டைத் தொடக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:

வாகனப் போக்குவரத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்காகவும், அதன் வாயிலாக நாட்டை மேம்படுத்தும்வதற்காகவும் பல்வேறு செயல் திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அவற்றில் குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால், நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக இரு மடங்காக்கப்பட்டுள்ளன; ஊரகப் பகுதிகளில் சாலை வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன; அதுமட்டுமன்றி, புறச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வாகனங்களை அரசு ஊக்குவித்து வருகிறது. விமானப் போக்குவரத்து சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன; அதற்கான கட்டணங்களும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன.

தற்போதைய சூழலில் இந்தியா புதிய உச்சத்தை நோக்கி முன்னேறி வருகிறது. உலக அளவில் அதிவேகமாக பொருளாதார வளர்ச்சியடைந்து வரும் நாடாக நமது தேசம் விளங்குகிறது. நாட்டின் 100 நகரங்கள் பொலிவுறு நகரங்களாக உருவாக்கப்பட்டு வருகின்றன. சாலை வசதிகளை மேம்படுத்தி வருவது மட்டுமன்றி விமான நிலையங்கள், துறைமுகங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய போக்குவரத்து தலங்களையும் விரிவுபடுத்தி வருகிறோம்.

அனைத்துக்கும் உச்சமாக நாடு முழுவதும் ஒரே வரி விதிப்புக்கு வகை செய்யும் சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழல் நிலவும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. சாமானிய மக்களுக்கு உறைவிடமும், கழிப்பறை வசதிகளும், சமையல் எரிவாயு இணைப்பும், வங்கிச் சேவைகளும் கிடைத்துள்ளன. நம் நாடு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருப்பதற்கு இத்தகைய திட்டங்களே சாலச் சிறந்த சான்று.

போக்குவரத்தைப் பொருத்தவரை, அதை மேலும் மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. சிக்கல் இல்லாத பயணத்தை மக்கள் மேற்கொள்ள வேண்டும் என்றால் அவர்களுக்கு சிறப்பான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். அதன் பயனால் நாட்டின் பொருளாதாரமே வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது.

அதிலும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வாகனங்களை மேம்படுத்த வேண்டும். புதுப்பிக்கத்தக்க எரிசக்திதான் பருவநிலை மாற்றத்துக்கு எதிரான வலுவான ஆயுதமாக இருக்கக்கூடும்.

சாதாரண பேட்டரியில் இருந்து அதிநவீன பேட்டரி வரை அனைத்து விதமான தயாரிப்புகளிலும் முதலீடுகளைஅதிகரிப்பது அவசியம். நாட்டில் பேட்டரி வாகனங்களின் விகிதத்தை அடுத்த 5 ஆண்டுகளில் 15 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப வரும் காலங்களில் அத்தகைய வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்க வேண்டும். கார் மட்டுமன்றி இரு சக்கர வாகனங்கள், ரிக்ஷாக்கள் வரை பேட்டரியில் இயங்கும் தொழில்நுட்பம் சென்றடைவது அவசியம் என்றார் பிரதமர் மோடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து