முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழில்நுட்பத் துறையில் இளம்பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் ஜனாதிபதி

செவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : தொழில்நுட்பத் துறையில் இளம்பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டுமென ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

மத்திய பொதுப்பணித் துறையில், பயிற்சியை முடித்த 97 துணை நிர்வாகப் பொறியாளர்கள் மற்றும் துணை கட்டட வடிவமைப்பாளர்களுடன், டெல்லியில் கலந்துரையாடிய ஜனாதிபதி  கூறியதாவது:

நாட்டின் உள்நாட்டு உற்பத்தி கடந்த காலாண்டில், 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. உலகின் வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது. உலக அளவில் பல்வேறு துறைகளில் இந்தியா முன்னேற்றம் அடைந்து வருகிறது.

நாட்டில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றை மேலும் அதிகரிப்பது இன்றியமையாதது ஆகும். மேலும், அவை கண்கவர் வகையிலும் அமைவது முக்கியமானதாகும்.

அரசின் திட்டங்களான தூய்மை இந்தியா திட்டம், இந்தியாவில் தயாரிப்போம் திட்டம், பொலிவுறு நகரங்கள் திட்டம், டிஜிட்டல் இந்தியா திட்டம் ஆகியவை இளைஞர்களின் பங்களிப்பின்றி வெற்றியடைய முடியாது.

மாற்றுத்திறனாளிகளுக்காக, "அணுகக்கூடிய இந்தியா' திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. எனவே, அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களிலும், அவர்களின் நலனை முன்னிறுத்துவது அவசியமாகும். அவர்களுக்கான வசதிகள், கட்டடத்தின் அடிப்படை அம்சங்களாக இருக்க வேண்டும். கட்டடங்கள், அலுவலகங்கள், சாலைகள் உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் அமைக்கப்பட வேண்டும். மேலும், திறன் மிகுந்த, கண்கவர் கட்டடங்களை உருவாக்க, பொறியாளர்களும் கட்டட வடிவமைப்பாளர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும்.

இளம்பெண்களின் பங்களிப்பு: பயிற்சியை முடித்தவர்களில், 25 சதவீதம் பேர் இளம்பெண்களாக இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த நிலை மேலும் உயர வேண்டும். பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில், இளம்பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து