முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.ஐ. அதிகாரிகளிடையே மோதல்: 2 வாரங்களுக்குள் விசாரணையை முடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு நாகேஸ்வரர் ராவ் கொள்கை முடிவு ஏதும் எடுக்க கூடாது

வெள்ளிக்கிழமை, 26 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு இடையே எழுந்துள்ள மோதல் போக்கை அடுத்து முன்னாள் இயக்குனர் அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இது தொடர்பான விசாரணையை 2 வாரங்களுக்குள் முடிக்கவும், நாகேஸ்வரர் ராவ் கொள்கை முடிவு எதையும் எடுக்க கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சி.பி.ஐ. இயக்குநராக அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோருக்கு இடையே பல்வேறு வழக்குகளில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்தன. இதையடுத்து உ.பி.யை சேர்ந்த இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி மீதான வழக்குகளை நீர்த்துப் போக செய்ய ராகேஷ் அஸ்தானாவுக்கு ரூ. 3 கோடியை மொயின் குரேஷி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ராகேஷ் அஸ்தானா மற்றும் சி.பி.ஐ. டி.எஸ்.பி தேவேந்திர குமார் மீது கடந்த 15-ம் தேதி சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. இதில் தேவேந்திர குமார் கைது செய்யப்பட்டார். இதற்கு பதிலடியாக, அலோக் வர்மா லஞ்சம் வாங்கியதாக கேபினட் செயலாளர், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு ராகேஷ் அஸ்தானா புகார் கடிதங்களை அனுப்பினார். வரும் 29-ம் தேதி வரை ராகேஷ் அஸ்தானாவை கைது செய்ய தடை விதித்து டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இரு அதிகாரிகளுக்கு இடையே கடும் மோதல் எழுந்துள்ள நிலையில், இணை இயக்குநர் நாகேஸ்வர் ராவை தற்காலிகமாக சி.பி.ஐ. இயக்குநராக நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. அதனை பெற்று கொண்டு அவரும் உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
சம்பந்தப்பட்ட இரு அதிகாரிகளும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில், சர்ச்சைக்குள்ளான அதிகாரிகளின் அறைகள் இரவோடு இரவாக சோதனை நடத்தப்பட்டது. இதி்ல் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு எதிராக முன்னாள் இயக்குனர் அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே கவுல் மற்றும் கே.எம் ஜோசப் ஆகியோர் அடங்கி அமர்வு முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்ததது. அப்போது சி.பி.ஐ. சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எப்.எஸ் நாரிமன், அலேக் வர்மாவின் செயல்பாடுகளால் லஞ்ச ஒழிப்பு துறையின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதால் தான் தற்காலிகமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறினர். சி.பி.ஐ.யின் பணிகள் சுமூகமாக நடைபெறவே தற்காலிகமாக நாகேஸ்வர் ராவ் நியமனம் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறுகையில்:,சி.பி.ஐ.யின் தற்காலிக இயக்குநர் நாகேஸ்வர் ராவ் நியமிக்கப்பட்ட அக்டோபர் 23-ம் தேதி முதல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் மூடி முத்திரையிடப்பட்ட கவரில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். அவர் இதுவரை எடுத்த எந்த முடிவையும் நடைமுறைபடுத்தக் கூடாது. அடுத்த விசாரணை நவம்பர் 12-ம் தேதி நடைபெறும். அதுவரை முக்கியமான கொள்கை முடிவு எதையும் நாகேஸ்வர் ராவ் எடுக்கக் கூடாது. சி.பி.ஐ. அதிகாரிகள் மீதான முறைகேடு புகார் தொடர்பான விசாரணையை 2 வார காலங்களுக்கும் மத்திய கண்காணிப்பு ஆணையம் முடித்துக் கொள்ள வேண்டும்.
முன்னாள் நீதிபதி பட்நாயக் இந்த விசாரணையை கண்காணிப்பார். அதிகாரிகள் அளித்த புகார் தொடர்பாக விசாரணையை முடிக்க போதிய ஆவணங்கள் தரப்படவில்லை என மத்திய கண்காணிப்பு ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையான ஆவணங்களை 10 நாட்களுக்குள் சி.பி.ஐ. சமர்பிக்க வேண்டும். இதுகுறித்து மத்திய அரசு, சி.பி.ஐ, அலோக் வர்மா சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை மீண்டும் நவம்பர் 12-ம் தேதி நடைபெறும் எனக் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து