மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதியில்லை: சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்

திங்கட்கிழமை, 3 டிசம்பர் 2018      இந்தியா
Supreme Court 27-09-2018

சென்னை, மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதியில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்த சுப்ரீம் கோர்ட், விவசாயி அய்யாக்கண்ணு தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தது.

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழக மக்கள் மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தினார்கள். அதன்பின் ஜல்லிக்கட்டுக்கான தடையும் விலக்கப்பட்டது. அதன் பின் மெரினா கடற்கரையில் அனுமதியின்றி மக்கள் கூடவும், போராட்டம் நடத்தவும், கூட்டம் நடத்தவும் தமிழக அரசு தடை விதித்தது. இந்நிலையில், தமிழக அரசு விதித்த தடைக்கு எதிராகவும், மெரினா கடற்கரையில் ஒருநாள் மட்டும் போராட்டம் நடத்த அனுமதிக்கக் கோரியும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் தனி நீதிபதி அதற்கு அனுமதி அளித்தார்.

ஆனால், தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் கூடுதல் அமர்வு நீதிபதிகள் மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தக் கூடாது என்பது தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு விதிகளுக்கு உட்பட்டது. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி தனி நீதிபதி அளித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு, அய்யாக்கண்ணுவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அய்யாக்கண்ணு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மெரினாவில் போராட்டம் நடத்தக் கூடாது என்பது தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறிய நீதிபதிகள் மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த ஒருவருக்கும் அனுமதியில்லை என்று உத்தரவிட்டு அய்யாக்கண்ணுவின் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து