முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் முதன் முறையாக அறிமுகம் எல்.கே.ஜி. யூ.கே.ஜி. வகுப்புகள் அரசு பள்ளிகளில் தொடக்கம் - சென்னையில் முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்

திங்கட்கிழமை, 21 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் முதன் முறையாக எல்.கே.ஜி. யூ.கே.ஜி. வகுப்புகளை அரசு பள்ளிகளில் துவக்கப்பட்டுள்ளது.

சென்னை, எழும்பூர், மாநில மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், பள்ளி கல்வித்துறை, சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை ஒருங்கிணைப்புடன் அங்கன்வாடி மையங்களில் முன்னோடி திட்டமாக மாண்டிசோரி கல்வியை அடிப்படையாக கொண்ட எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

ஏழை, எளிய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் ஆங்கில வழி முன்பருவக் கல்வி பயில வேண்டும் என்பதற்காக தங்கள் சக்திக்கும் மீறி அதிக கட்டணங்கள் செலுத்தி தனியார் பள்ளிகளில் கல்வி பயில்வதற்காக அனுப்பி வைக்கிறார்கள்.  எனவே, ஏழை எளிய பெற்றோர்களின் பொருளாதார சுமைகளை குறைத்திடவும், அக்குழந்தைகளுக்கு சிறந்த முன்பருவக் கல்வி அளித்திட வேண்டுமென்ற உயரிய நோக்கிலும், அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, அங்கன்வாடி மையங்களில் மாண்டிசோரி கல்வியை அடிப்படையாக கொண்ட எல்.கே.ஜி. மற்றும் யூ.கே.ஜி. வகுப்புகளை துவக்கும் திட்டத்தை பள்ளி கல்வித்துறை, சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை ஒருங்கிணைப்புடன் செயல்படுத்திட உள்ளது.  

இத்திட்டத்தின் கீழ்,  தமிழகத்தில் 2,381 அங்கன்வாடி மையங்களில் உள்ள 52,933 குழந்தைகள் பயன்பெறும் வகையில், 32 மாவட்டங்களிலும் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் பள்ளிக்கல்வித் துறை, சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை ஒருங்கிணைப்புடன் முன்னோடி திட்டமாக எல்.கே.ஜி. மற்றும் யூ.கே.ஜி. வகுப்புகளை துவக்கிட  அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் 2381 அங்கன்வாடி மையங்கள் சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் நிர்வாக பொறுப்பிலும், முன்பருவக் கல்வி செயல்பாடுகள் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மேற்பார்வையிலும் இயங்கும். அக்குழந்தைகளுக்கு பாடம் கற்று கொடுத்திட பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கு சமக்ர சிக்சா அபியான் திட்டத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்படும். 

மேலும், எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி. வகுப்பு பயிலும் குழந்தைகளுக்கு,  4 இணை பள்ளிச் சீருடைகள், காலணிகள், முன்பருவக் கல்வி உபகரணங்கள் கலர் பென்சில்கள், கிரையான்ஸ்கள், மலைப்பகுதிகளில் வாழும் குழந்தைகளுக்கு  கம்பளி சட்டை, மழைக்கால பூட்ஸ் ஆகிய பொருட்கள் தமிழ்நாடு அரசால் விலையில்லாமல் வழங்கப்படும். அத்துடன் எல்.கே.ஜி. மற்றும் யூ.கே.ஜி. படித்து முடித்தபின் அக்குழந்தைகளுக்கு நிறைவு சான்றிதழ்களும் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதை ஊக்குவிப்பதுடன், குழந்தைகளின் கற்றல் திறன், ஆங்கிலத்தில் பேசும் மற்றும் எழுதும் திறனும் முன்னேற்றம் பெறும். மேலும், ஏழை எளிய மக்களின் குழந்தைகளும் சிறப்பான ஆரம்ப கல்வி பெற்று வாழ்வில் ஏற்றம் பெற்றிட வழிவகை ஏற்படும்.

இந்த விழாவில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், டி.ஜெயக்குமார், டாக்டர் வெ. சரோஜா, உடுமலை கே. ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, பா.பென்ஜமின், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா. வளர்மதி, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் மணிவாசன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட இயக்குநர் மற்றும் குழும இயக்குநர் கண்ணன், பள்ளி கல்வி இயக்குநர் முனைவர்  இராமேஸ்வரமுருகன், தொடக்க கல்வி இயக்குநர் முனைவர் கருப்பசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து