மேலும் 3 நாட்களுக்கு தமிழகத்தில் அனல் காற்று வீசும் - சென்னை வானிலை மையம் தகவல்

செவ்வாய்க்கிழமை, 14 மே 2019      தமிழகம்
thermal wind 2019 05 14

சென்னை : அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் அனல் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது,

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருச்சி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் . மழை பெய்யாத இடங்களில், அடுத்த மூன்று நாட்களுக்கு, அனல் காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் 6 செண்டி மீட்டர், நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் 4 செண்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. கோவை, ஈரோடு, திருச்சியிலும் மழை பெய்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் தற்போது சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் பெரும்பாலான மாவட்டங்களில் சதத்தை தாண்டியுள்ளது. இந்த கடும் வெயிலை சமாளிக்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர். பகல் நேரங்களில் வெளியே செல்ல அச்சமடைந்து மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடும் வெயிலால் அனல் காற்று வீசி வருகிறது. இரவு நேரங்களில் கூட வெயிலின் தாக்கத்தால் நிலவும் வெப்பத்தால் தூக்கமின்றி மக்கள் தவித்து வருகின்றனர். ஏற்கனவே தமிழகத்தில் அனல் காற்று வீசி வரும் நிலையில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து