மாவட்டங்கள் தோறும் உரிய நிதி ஒதுக்கீடு: தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க உடனடி நடவடிக்கை - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

வெள்ளிக்கிழமை, 17 மே 2019      தமிழகம்
cm edapadi 2019 03 03

மதுரை : தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மாவட்டங்கள் தோறும் உரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் மருது அழகு ராஜின் மகன் திருமணம் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் நேற்று நடந்தது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் சென்னை செல்வதற்காக மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அண்ணன் அண்ணாதுரை அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கின்றார். அவருக்கு என்னுடைய இதயபூர்வமான நல்வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்டாலின் மற்றும் தினகரன் எல்லோருடைய கடுமையான தேர்தல் பரப்புரையை கடந்து, வருகிற 19-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. என்னுடைய பரப்புரை, துணை முதலமைச்சரின் பரப்புரை, எங்களுடைய கூட்டணி கட்சித் தலைவர்களின் பரப்புரைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கேள்வி: கமல்ஹாசன் இந்துக்களுக்கு எதிரான அவதூறான கருத்துக்களை பரப்பி வருகிறாரே?

பதில்:  மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஒரு தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இதுகுறித்து யாரும் ஊடகத்திலோ, பத்திரிகையிலோ, அரசியல் கட்சித் தலைவர்களோ பேசாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அந்த அடிப்படையில் உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல இயலாத நிலையில் உள்ளேன்.

தேர்தல் பிரசாரத்தின் போது மத உணர்வுகளை தூண்டும் விதமாக பேசுவோர் மீது தேர்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்க முடியாது. தேர்தல் விதிமுறையை பின்பற்றி அரசியல் தலைவர்கள் பேசினால் எந்த பிரச்சனையும் ஏற்படாது.

கேள்வி: தேனியில் ரவீந்திரநாத் எம்.பி. என்று போட்டு, கல்வெட்டு வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதே?

பதில்: என்னுடைய கவனத்திற்கு இதுவரை வரவில்லை.

கேள்வி: குடிநீர் பிரச்சினை அதிகமாக இருக்கின்றதே?

பருவமழை சரியாக பொழியாத காரணத்தினாலே கடுமையான வறட்சியின் காரணமாக இந்த குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதைப் போக்க, ஏற்கனவே தேர்தலுக்கு முன்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அழைத்து அறிவுரை வழங்கியிருக்கின்றேன். எந்தெந்த பகுதிகளில் வறட்சியால் குடிநீர் பிரச்னை ஏற்பட்டிருக்கின்றதோ, அந்தப் பகுதிகளுக்கெல்லாம் உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் தலையிட்டு அந்த பகுதி மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்க வேண்டுமென்ற உத்தரவை வழங்கி அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கான நிதியையும் முன்கூட்டியே அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

கேள்வி: அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக சூரப்பா குற்றம் சாட்டியிருக்கின்றாரே ?

பதில்: அது தவறான குற்றச்சாட்டு.

கேள்வி: மத உணர்வுகளை தூண்டக்கூடிய விதமாக பேச்சுக்கள் இருப்பதற்கு எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்படும்?

பதில்: தேர்தல் நேரத்தில் நடைபெறக்கூடிய பரப்புரை என்பதால் தேர்தல் கமிஷன் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முடியாது. தேர்தல் அதிகாரியின் கட்டுப்பாட்டில் இவைகளெல்லாம் வருகின்றது. தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி அரசியல் தலைவர்கள் பேசினால் இப்படிப்பட்ட பிரச்னைகள் எழாது. அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி பேசினால் நன்றாக இருக்கும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து