17-வது மக்களவையின் பார்லி. முதற்கூட்டம் துவங்கியது: புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு

திங்கட்கிழமை, 17 ஜூன் 2019      இந்தியா
parliament meet 2019 06 17

புதுடெல்லி : 17-வது மக்களவையின் முதற்கூட்டம் துவங்கியது அப்போது பிரதமர் மோடி உள்ளிட்ட புதிய எம்.பி.க்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

முதல் கூட்டத்தொடர்...

நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி அபார வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த 30-ம் தேதி பதவி ஏற்றது. அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் 31-ம் தேதி கூடிய மத்திய அமைச்சரவை முதல் கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை ஜூன் 17-ம் தேதி கூட்ட முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி நேற்று  (திங்கட்கிழமை) 17-வது நாடாளுமன்ற மக்களவை முதல் முறையாக கூடியது.

தற்காலிக சபாநாயகர்...

முன்னதாக, பாரதீய ஜனதா கட்சியின் மூத்த எம்.பி. வீரேந்திர குமார் தற்காலிக சபாநாயகராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 17-வது மக்களவை கூடியதும், புதிய உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர். முதலில் பிரதமர் மோடி எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார். அவரைத்தொடர்ந்து அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டனர். ராகுல் காந்தியும் எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார். புதிய எம்.பி.க்களுக்கு இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள பாரதீய ஜனதா கட்சி மூத்த எம்.பி. வீரேந்திர குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

ஸ்மிரிதி ராணி...

அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வீழ்த்தி, எம்.பி.யாக தேர்வான ஸ்மிரிதி இராணியும் நேற்று எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார். ஸ்மிரிதி இராணி எம்.பி.யாக பதவியேற்கும் போது, பாஜக எம்.பி.க்கள் மேஜையை தட்டி நீண்ட நேரம் வரவேற்பு தெரிவித்தனர். பிரதமர் மோடி, ராஜ்நாத்சிங் உள்பட பாஜக எம்.பி.க்கள் நீண்ட நேரம் மேஜையை தட்டி பாராட்டினர். இந்தியில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட ஸ்மிரிதி இராணி, இடைக்கால சபாநாயகர் விரேந்திர குமார், சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது ராகுல் காந்தி அவையில் இல்லை. மத்திய ஜவுளித்துறை அமைச்சரான ஸ்மிரிதி இராணி, அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை சுமார் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து