பருவமழை பொய்த்தால் குறிப்பிட்ட பகுதிகளில்தான் பிரச்சனை: தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் இருப்பது போல் மாயையை ஏற்படுத்த வேண்டாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

செவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2019      தமிழகம்
cm-jaya 2019 06 18

சென்னை, பருவமழை பொய்த்தால் குறிப்பிட்ட பகுதிகளில்தான் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஆனால், தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் இருப்பது போல் மாயையை ஏற்படுத்த வேண்டாம் என்று எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா நினைவிடங்களில் அஞ்சலி செலுத்திய பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஆய்வு...

மெரினா கடற்கரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு மண்டபம், ஐந்து மாதத்திற்குள் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். வடசென்னை, மெரினா கடற்கரையில், ஜெயலலிதாவின் நினைவு மண்டப கட்டுமானப் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டிவருமாறு:-

துரிதமாக முடிக்க...

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாநினைவு மண்டப கட்டிடப் பணியை பார்வையிட நாங்கள் வந்திருக்கின்றோம். இந்தப் பணி 7.5.2018 அன்று துவங்கப்பட்டு, இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்தப் பணியை வேகமாக, துரிதமாக முடிக்க வேண்டும் என்று பொதுப்பணித் துறை பொறியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

5 மாதத்திற்குள்...

ஜெயலலிதாவின் புகழுக்கு புகழ் சேர்க்கின்ற விதமாக இந்த நினைவு மண்டபம் அமைய இருக்கின்றது. இந்த நினைவு மண்டபம் ரூ 50.80 கோடி செலவில் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு, பணி துவங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இது ஒரு டெக்னிக்கலான கட்டிடப் பணி, இது பல வேலைபாடுகளுடன் நடைபெறுகின்ற பணி. கிட்டத்தட்ட 60 சதவிகிதப் பணிகள் முடிவடைந்து விட்டது. இந்தப் பணி சிறப்பாக நடைபெற்று மக்கள் போற்றும் விதமாக, பீனிக்ஸ் பறவை போல வடிவமைக்கப்படும். இந்த நினைவு மண்டப கட்டிடப் பணி முழுவதும் இன்னும் ஐந்து மாத காலத்திற்குள் நிறைவடைந்து மக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாயை ஏற்படுத்த...

இயற்கை பொய்த்துவிட்டது, பருவமழை போதிய அளவு பெய்யாததால் மிகுந்த வறட்சி ஏற்பட்டுள்ளது. எங்கெல்லாம் குடிநீர் பிரச்சினை இருக்கிறதோ அங்கெல்லாம் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தேவையான அளவு குடிநீர் வழங்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்கிறது. ஒரு இடத்தில் இருக்கும் தண்ணீர் பிரச்சினையை தமிழகம் முழுவதும் இருப்பதுபோல் மாயை ஏற்படுத்த வேண்டாம்.

நிலத்தடி நீரை...

இன்னும் 3 மாத காலத்திற்கு நிலத்தடி நீரை எடுத்துதான் தர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சினையை தீர்க்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். தி.மு.க. எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர். எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து