முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிஜா வைத்தியநாதன் - டி.கே.ராஜேந்திரன் ஓய்வு: புதிய தலைமை செயலர் சண்முகம்; புதிய டி.ஜி.பி. ஜே.கே. திரிபாதி நியமனம் செய்து தமிழக அரசு அறிவிப்பு

சனிக்கிழமை, 29 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகமும், சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக திரிபாதியும் தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

46-வது செயலாளர்...

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோர் இன்றுடன் ஓய்வு பெறுகின்றனர். இதையடுத்து அந்த பதவிகளுக்கு புதிய அதிகாரிகளை அரசு நியமித்துள்ளது. நிதித்துறை செயலாளராக இருந்த கே. சண்முகம் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழக அரசின் 46-வது தலைமை செயலாளர் ஆவார். இதே போல் சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவராக இருந்த திரிபாதி சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கூடுதல் எஸ்.பி.யாக...

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜே.கே. திரிபாதி 1979-ல் சம்பல்பூர் பல்கலை கழகத்தில் இளங்கலை பிரிவில், பொலிட்டிகல் சயின்ஸ் படித்துள்ளார். பின்னர் டெல்லியில் உள்ள நேரு பல்கலை கழகத்தில் எம்.ஏ. பொலிட்டிகல் சயின்ஸ் படித்த அவர், 1985-ல் காவல்துறை பணியில் சேர்ந்தார். 1988-ம் ஆண்டு மதுரை புறநகர் பிரிவில் கூடுதல் எஸ்.பி.யாக தமிழகத்தில் பணியை தொடங்கினார், திரிபாதி.

மாவட்ட ஆணையராக...

1989-ம் ஆண்டு சென்னை பரங்கிமலை மதுவிலக்கு பிரிவில் எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்று பணியாற்றிய திரிபாதி, பின்னர் நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் எஸ்.பி.யாக பணிபுரிந்தார். 1999-ம் ஆண்டு திருச்சி மாநகர ஆணையராக பணியாற்றிய அவர், பின்னர், 2001 முதல் 2004-ம் ஆண்டு வரை சென்னையில் தெற்கு மண்டல இணை ஆணையராக பணி புரிந்தார். 2005 முதல் 2011-ம் ஆண்டு வரை சுமார் ஆறு ஆண்டுகள் தெற்கு மண்டல ஐ.ஜி.யாக பணிபுரிந்த திரிபாதி, 2011-ம் ஆண்டு சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

ஜனாதிபதி விருது...

சென்னை மாநகர காவல் ஆணையராக இவர் இருந்த போது தான், தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வங்கிக் கொள்ளையர்கள் 5 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2015-ம் ஆண்டு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாகவும், 2012 முதல் 2015 வரை சிறைத்துறையின் கூடுதல் டி.ஜி.பி.யாகவும் திரிபாதி பணியாற்றினார். தற்போது காவல்துறை சீருடை பணியாளர் தேர்வாணைய டி.ஜி.பி.யாக சென்னையில் பணியாற்றி வரும் அவர், சிறப்பான சேவைக்காக, 2002-ம் ஆண்டு பிரதமரின் விருதையும், 2011-ல் ஜனாதிபதி விருதையும் பெற்றுள்ளார். தற்போது, தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார்.

உயர் பொறுப்புகள்..

1985ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான திரிபாதி ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி, காவல் ஆணையர், பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி, தென் மண்டல ஐஜி, சிபிசிஐடி ஐஜி உள்ளிட்ட உயர் பொறுப்புகளை வகித்தவர்.

சேலத்தை சேர்ந்தவர்...

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கே.சண்முகமும் நிதித்துறைக்கு (பொறுப்பு), கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்தில் இருந்தவர். மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சண்முகம் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். 1985ஆம் ஆண்டு கேடரை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி சண்முகம், கடந்த 2010ஆம் ஆண்டு முதல் திமுக ஆட்சிக் காலத்தில் இருந்தே நிதித்துறை செயலராக பொறுப்பு வகித்து வருகிறார்.

9 ஆண்டுகளாக...

திமுக ஆட்சியிலும் அதிமுக ஆட்சியிலும் நிதித்துறை செயலாளராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கடந்த 9 ஆண்டுகளாக நிதித்துறை செயலாளராக உள்ள அவர், அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்ட காலங்களில் திறம்பட செயல்பட்டு நிதிச்சுமையை பெருமளவு குறைத்தவர். எம்.எஸ்.சி., வேளாண்மை படித்துள்ள சண்முகம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் ஆட்சியராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து