காஞ்சிபுரம் : காஞ்சீபுரத்தில் 29-ம் நாளான நேற்று செந்நிற பட்டாடையில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அத்திவரதரை இதுவரை 41 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிற பட்டாடையில் காட்சியளிக்கும் அத்திவரதர் 29-ம் நாளான நேற்று செந்நிற பட்டாடையிலும் தாமரை மற்றும் பன்னீர் ரோஜாப் பூ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றார். அதிகாலையிலேயே 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு வந்து தரிசனத்திற்காக காத்திருந்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. நீரில் மூழ்கியிருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே வந்து 48 நாள்களுக்குப் பக்தர்களுக்கு அருள்புரிவதால், பெருமாளை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். சனி, ஞாயிறு என இரண்டு விடுமுறை நாட்கள் இடையில் கடக்க அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இவ்விரு நாட்களில் மட்டும் சுமார் 5.5 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை காண வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுவரை பொது தரிசனத்துக்காக 3 வரிசையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கிழக்கு கோபுர வாயில் வழியாக 5 வரிசையில் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் அத்திவரதர் தரிசனத்துக்காக கோவிலில் குவிந்துள்ளனர். இதுவரை 41 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.