முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்திற்கு 5-வது முறையாக மத்திய அரசின் வேளாண் விருது: முதல்வரிடம் காண்பித்து அமைச்சர் வாழ்த்து பெற்றார்

வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி திறனில் சாதனை படைத்ததற்காக 2017-18ஆம்ஆண்டிற்கான மத்திய அரசின் கிரிஷி கர்மான் விருதுக்கு ஐந்தாவது முறையாக தமிழ்நாடு அரசு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கடிதத்தை முதல்வரிடம் காண்பித்து வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு வாழ்த்து பெற்றார். 

வேளாண் விளைபொருட்களின் உற்பத்தி மற்றும் அதன் திறனை அதிகரிக்கவும், விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதற்கும், பல்வேறு திட்டங்களை தீட்டி தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. 2011-12ஆம் ஆண்டில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாம் பசுமைப் புரட்சி மற்றும் உணவு தானிய இயக்கத்தின் வாயிலாக தமிழ்நாட்டில் உணவு தானிய உற்பத்தியில் தற்போது இரு மடங்கு சாதனை அடையப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் முயற்சிகளாலும், உற்பத்தித் திறனை அதிகரிக்க வேளாண் துறையால் கடைப்பிடிக்கப்பட்ட புதிய சாகுபடி தொழில்நுட்பங்களாலும், வேளாண் உற்பத்தியில் உள்ள இடைவெளியினைக் குறைத்து, தமிழ்நாடு 2011-12, 2013-14, 2014-15 மற்றும் 2015-16 ஆகிய வருடங்களில் 100 லட்சம் மெட்ரிக் டன்னிற்கும் அதிகமாக உணவுதானிய உற்பத்தி செய்து சாதனை அடைந்துள்ளது. தமிழக அரசு எடுத்த பல்வேறு முயற்சிகளால் தமிழகத்தில், வேளாண் உற்பத்தி அதிகரித்து உயரிய சாதனை அடைந்ததற்காக நான்கு முறை மத்திய அரசு கிருஷி கர்மான் விருதினை தமிழ்நாடு அரசுக்கு வழங்கியுள்ளது. முதலாவதாக 2011-12ஆம் ஆண்டில் 101.5 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்து சாதனை அடைந்ததற்காகவும், 2013-14 ஆம் ஆண்டில் 6.14 லட்சம் மெட்ரிக் டன் பயறு வகை உற்பத்தி செய்து சாதனை அடைந்ததற்காகவும், 2014-15ஆம் ஆண்டில் 40.79 லட்சம் மெட்ரிக் டன் சிறுதானிய உற்பத்தி செய்து சாதனைஅடைந்ததற்காகவும், 2015-16 ஆம் ஆண்டில் மீண்டும் உணவு தானிய உற்பத்தி செய்து சாதனை அடைந்ததற்காகவும், இவ்விருதுகள் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, 2016-17ஆம் ஆண்டில் தமிழகத்தில் கடும் வறட்சி நிலவிய போதும், அரசின் சீரிய முயற்சிகளினால் 2017-18 ஆம் ஆண்டிலும் 107.133 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்து சாதனை எய்தப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக எண்ணெய் வித்துக்களில் 10.382 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தியும், உற்பத்தித் திறனில் ஹெக்டேருக்கு 2,729 கிலோ என்ற அளவிலும் அதிகரித்துள்ளது. இது அகில இந்திய சராசரி உற்பத்தித் திறனான ஹெக்டேருக்கு 1284 கிலோ என்ற அளவை விட இருமடங்கிற்கும் அதிகமாக, அதாவது 113 சதவீதம் அதிகரித்துள்ளது. எண்ணெய் வித்துப் பயிர்களில் தமிழ்நாட்டின் இச்சாதனைக்காக, 2017-18ஆம் ஆண்டின் கிருஷி கர்மான் விருதுக்கு தமிழ்நாடு தற்போது மத்திய அரசினால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த விருதினையும் சேர்த்து, 2011-12ஆம் ஆண்டு முதல் 2017-18 ஆம் ஆண்டு வரை, இந்த அரசு  வேளாண்மைத் துறையில் ஐந்து முறை கிருஷி கர்மான் விருதினைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த நிகழ்வின் போது, தலைமைச் செயலாளர் . சண்முகம், வேளாண்மைத் துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து