முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் மறைவுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 7 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் மறைவு குறித்து சட்டசபையில் இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த தீர்மானத்தை கொண்டு வந்து சபாநாயகர் தனபால் பேசியதாவது:–

தமிழக சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் 1977–80, 1980–84, 1985–88, 1989–91 ஆகிய ஆண்டுகளில் 4 முறை சேரன்மாதேவி தொகுதியிலிருந்து தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழக சட்டசபையின் துணைத் தலைவராகவும், சட்டசபை தலைவராகவும் பணியாற்றியவர். அதே போல் மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றி இருக்கிறார். அவர் 4.1.2020 அன்று மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும், ஆற்றொணா துயரமும் ஏற்பட்டது.

பி.எச். பாண்டியன் இனிய பண்புக்கு சொந்தக்காரர். அடக்கத்துடன் செயல்பட்டவர். கொள்கை பிடிப்பு கொண்டவர். அனைவரையும் அரவணைத்து செல்லும் பண்புமிக்கவர். திறமையான வழக்கறிஞர், ஆழந்த அனுபவம் கொண்டவர். இந்த பேரவையை கண்ணியத்துடனும், கண்டிப்புடனும் நடத்தியவர். அவரது மறைவு தொடர்பாக அவர் குடும்பத்துக்கு இந்த அவை ஆழந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது என்றார்.

அதை தொடர்ந்து பி.எச்.பாண்டியன் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில், சபையை 15 நிமிடம் ஒத்திவைப்பதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். அதே போல் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

பெருந்துறை தொகுதியை சேர்ந்த தி.க. நல்லப்பன், சி.க.வடிவேலு (தொட்டியம்), ஜெனீபர் சந்திரன் (திருசெந்தூர்), எஸ்.ஏ.எம். உசேன் (திருவல்லிக்கேணி), சு. சுப்ரமணியம் (உத்திரமேரூர்), கே.வி.முரளிதரன் (தளி), என். அழகராஜா (தேனி), ரா.நாராயணன் (தாரமங்கலம்), கே.கே. சின்னப்பன் (ஜெயங்கொண்டம்), வ.மு. சுப்ரமணியன் (மானாமதுரை), ஒய். பாலசுந்தரம் (அச்சரப்பாக்கம்), டாக்டர் மு. தேவராஜன் (பெரம்பலூர்), எம். சக்திவேல் (அம்பாசமுத்திரம்) ஆகியோர் மறைவுக்கு அவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உறுப்பினர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். 15 நிமிடம் கழித்து மீண்டும் அவை கூடியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து