பட்டங்களை துறந்த ஹாரி, மேகன் தம்பதி மக்கள் வரிப்பணத்தையும் பெற மாட்டார்கள் - பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2020      உலகம்
Harry waived Megan Couples 2020 01 19

லண்டன் : இங்கிலாந்து இளவரசர் ஹாரி, அவரின் மனைவி மேகன் மார்கல் இனிமேல் ஒருபோதும் பெருமைக்குரிய இளவரசர், இளவரசி பட்டங்களைப் பயன்படுத்த மாட்டார்கள், மக்களின் வரிப்பணத்தையும் பெறமாட்டார்கள் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. மேலும் இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு, சசெக்ஸ் இளவரசர் ஹாரியும், அவரின் மனைவி இளவரசி மேகன் மார்கலும் அதிகாரப்பூர்வமாக பிரதிநிதிகளாகக் கருத மாட்டார்கள் என்று பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் இருவரும் ராஜ வாழ்க்கை வேண்டாம் என்றும் தனியாக சுதந்திரமாக உழைத்து வாழ விரும்புவதாக சமீபத்தில் அறிவித்தனர்.  தங்களுக்கு எவ்வித பதவியும் சொத்தும் வேண்டாம் என்றும் அவர்கள் இருவரும் அறிவித்தனர். ஹாரியும், மேகனும் கனடாவில் வாழப் போவதாகவும் அறிவித்தனர். இதுதொடர்பாக இளவரசர் சார்லஸ் அழைப்பின் பெயரில் ஹாரி, அவரின் மனைவி மேகன் ஆகியோர் பேச்சு நடத்தினர். ஆனால் அவர்கள் தங்கள் முடிவில் உறுதியாக இருந்ததையடுத்து, அவர்களை அரச குடும்ப கடமைகளில் இருந்து விடுக்க முடிவு எடுத்தனர். இது தொடர்பாக பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு, சசெக்ஸ் இளவரசர் ஹாரியும், அவரின் மனைவி இளவரசி மேகன் மார்கலும் அதிகாரப்பூர்வமாக பிரதிநிதிகளாகக் கருத மாட்டார்கள். அவர்கள் இருவரும் அரச குடும்பத்தின் இளவரசர், இளவரசி எனும் பெருமைக்குரிய பட்டத்தை இனிமேல் வைத்திருக்க மாட்டார்கள். தங்களின் குடும்ப இல்லமான பிராக்மோர் காட்டேஜ் புனரமைக்கும் பணிக்காக மக்களின் வரிப்பணமாக ரூ. 22.19 கோடி (24 லட்சம் பவுண்ட்) பெற்றதையும் திரும்பித் தருவதாக அறிவித்தனர். இந்த புதிய ஏற்பாடுகள் அனைத்தும் வரும் வசந்த காலத்தில் இருந்து நடைமுறைக்கு வரும் ஹாரி, மேகன் ஆகியோருடன் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பலகட்டங்களாகப் பேச்சு நடத்தியபின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஹாரி, மேகன் இருவரும் தாங்கள் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. இருப்பினும், என்னுடைய ஆதரவும், குடும்பத்தின் ஆதரவும் எப்போதும் என்னுடைய பேரன் ஹாரிக்கும், மேகனுக்கும் தொடர்ந்து இருக்கும். இருவரும் குடும்பத்தின் அன்புக்குரிய உறுப்பினர்களாகவே இருப்பார்கள். கடந்த இரு ஆண்டுகளாக அவர்கள் தீவிரமாக ஆலோசித்ததையும், அனுபவித்த சவால்களையும் உணர்கிறேன், அவர்கள் சுதந்திரமாக வாழ ஆதரவு தருகிறேன். நாட்டின் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். குறிப்பாக மேகன் எங்கள் குடும்பத்துக்குள் இணைந்தது பெருமையாக இருக்கிறது. இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம் ஹாரி, மேகன் இருவரும் அமைதியான, மகிழ்ச்சியான புதிய வாழ்க்கையை தொடங்குவார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து