அரச குடும்பத்திலிருந்து விலகியதற்கான காரணம் என்ன? மவுனம் கலைத்த ஹாரி

திங்கட்கிழமை, 20 ஜனவரி 2020      உலகம்
Harry 2020 01 20

லண்டன் : அரச குடும்பத்திலிருந்து விலகியதற்கான காரணம் குறித்து முதன்முறையாக மவுனம் கலைத்து ஹாரி பேசியுள்ளார்.  

ஒரு காலத்தில், சூரியன் மறையாத தேசம் என வர்ணிக்கப்பட்டது இங்கிலாந்து சாம்ராஜ்யம் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அரச பாரம்பரியத்தை கொண்டது. காலனி ஆதிக்கத்தில், பல நாடுகளை தனது பிடிக்குள் வைத்திருந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் சரிவை சந்திக்கத் தொடங்கிய காலங்களுக்கு முன்பாகவே, இங்கிலாந்து அரச குடும்ப உறுப்பினர்கள் திடீர் திடீரென எடுக்கும் அசாதாரண முடிவுகளால், சங்கடங்களையும், சர்ச்சைகளையும் பக்கிங்ஹாம் அரண்மனை சந்திக்கத் தவறவில்லை.

1936ஆம் ஆண்டு, 2 முறை விவாகரத்தான அமெரிக்க பெண்ணை மணக்க விரும்பிய மன்னர் 8-ஆம் எட்வர்டு தனது பதவியை உதறிய நாள் முதலே, அரச குடும்ப சர்ச்சைகள் தொடர்கின்றன. 1952ஆம் ஆண்டு, இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத்தின் செல்ல தங்கையாக வலம் வந்த இளவரசி மார்க்கிரேட், பிரிட்டன் விமானப்படையின் முன்னாள் அதிகாரியை மணக்க விரும்பியபோது, பிரிட்டிஷ் அரசக் குடும்பத்துக்குள் பெரும் புயலை அது உருவாக்கியது.

1992 பிரிட்டன் இளவரசர் சார்லஸ்-டயானா பிரிவு, அதே ஆண்டில், இளவரசர் ஆண்ட்ரூ, இளவரசி ஆனி ஆகியோர் அடுத்தடுத்து இல்லற துணைகளை பிரிந்ததும் அரச குடும்பத்தை பெரும் சங்கடத்தில் ஆழ்த்தியது. 1997ல் டயானா விபத்தில் சிக்கியபோது, பக்கிங்ஹாம் அரண்மனை பெரும் சர்ச்சையை எதிர்கொண்டு ஒருவழியாக மீண்டது.
டயானா மறைவுக்கு பின்னர் 20 ஆண்டுகளாக சர்ச்சைகள் ஓய்ந்த நிலையில், அண்மையில், அரச பதவிகளோ, அதன் சொத்துகளோ எதுவும் வேண்டாம் என உதறித் தள்ளி, பக்கிங்ஹாம் அரண்மனையை மீண்டும் அதிர வைத்தார் இளவரசர் ஹாரி.

மிகவும் கவுரவமிக்க பதவியை கைவிட ஹாரி-மேகன் தம்பதி எடுத்த முடிவு, உலகளவில் விவாதத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து விவாதிக்க, குடும்ப உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டியபோது, ராணி இரண்டாம் எலிசபெத்தால், அமைதியான தீர்வை எட்ட முடியவில்லை. அரண்மனையை விட்டு வெளியேறும் முடிவில் இளவரசர் ஹாரி உறுதியாக இருந்ததால், அதற்கு, பாட்டிக்கே உரித்தான ஆற்றாமையுடன் ராணி இரண்டாம் எலிசபெத் அனுமதி அளித்தார்.

ஹாரி தம்பதி கனடாவில் வசிக்க போவதாக அறிவித்துள்ள நிலையில், அந்த நாட்டில் அவர்களின் பாதுகாப்பிற்கான செலவுகளை யார் கொடுப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதே நேரத்தில் குடியுரிமை இல்லாத இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் 6 மாதங்கள் மட்டுமே கனடா நாட்டில் வசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஹாரி தம்பதி விரைவில் கனடா குடியுரிமை கோரி விண்ணப்பிக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, பக்கிங்ஹாம் அரண்மனையை விட்டு வெளியேறும், ஹாரி-மேகன் தம்பதிக்கும், அவர்களின் குழந்தைக்கு, பிரிட்டன் மக்களின் வாழ்த்துகள் என்றென்றைக்கும் இருக்கும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வாழ்த்தி உள்ளார்.

அரச குடும்பத்திலிருந்து விலகியதற்கான காரணம் குறித்து முதன்முறையாக ஹரி நேற்று முன்தினம் பேசியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன், ஹரி மற்றும் மேகன் ஆகியோர் அரச கடமைகளில் இருந்து விலகுவதாகவும், தங்களது நேரத்தை வடஅமெரிக்கா மற்றும் கனடாவில் பிரித்து செலவிட போவதாகவும் அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டனர். இதற்கு ராணியும் சம்மதம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
இந்த நிலையில், அவரும் அவரது மனைவி மேகன் மெர்க்கலும் ஏன் இந்த முடிவை எடுத்தார்கள் என்று நேற்று இரவு நடந்த சென்டபேல் நிகழ்ச்சியில் விருந்தினர்களிடம் ஹரி கூறியுள்ளார். அவர் கூறியதாவது,

"மேகனும், நானும் திருமணமானவுடன், நாங்கள் உற்சாகமாக இருந்தோம். நாங்கள் நம்பிக்கையுடன் இருந்தோம். நாங்கள் சேவை செய்ய இங்கு வந்தோம்". அந்த காரணங்களினாலே, இது நடந்துவிட்டது என்பது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

என் மனைவியும், நானும் பின்வாங்குவதற்கான முடிவு நான் எளிதாக எடுத்ததல்ல. இது பல மாத யோசனைகள் , பல வருட சவால்களுக்கு பிறகு எடுக்கப்பட்டது. நான் எப்போதுமே சரியாக செய்வதில்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் இதைவிட்டால் வேறு வழியில்லை. நானும், மேகனும் விலகிச்செல்லவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

“ராணி, காமன்வெல்த் மற்றும் எனது ராணுவ சங்கங்களுக்கு தொடர்ந்து சேவை செய்வதே எங்கள் நம்பிக்கை. ஆனால் பொது நிதி இல்லாமல், துரதிர்ஷ்டவசமாக அது சாத்தியமில்லை".

இந்த முடிவை நான் ஏற்றுக்கொண்டேன். இது நான் யார் அல்லது நான் எவ்வளவு உறுதியுடன் இருக்கிறேன் என்பதை மாற்றாது என்பதை அறிவேன். ஆனால் அது, என்ன வர வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது என்று நான் நம்புகிறேன்.மேலும் அமைதியான வாழ்க்கையாக இருக்க முடியும் என்று நான் நம்புகிறேன் என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து