ப்ரித்வி ஷாவுக்குப் பதில் ஷுப்மான் கில்லுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்: ஹர்பஜன் சிங்

புதன்கிழமை, 12 பெப்ரவரி 2020      விளையாட்டு
Prithvi Shah-Harbhajan Singh 2020 02 12

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக ஷுப்மான் கில்லை களம் இறக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா, மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கி வந்தனர். ரோகித் சர்மா காயத்தால் டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளதால் ப்ரித்வி ஷா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 16 மாதங்களுக்குப்பின் மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.

21-ம் தேதி தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக மயங்க் அகர்வால் உடன் களம் இறங்க ஷுப்மான் கில் மற்றும் ப்ரித்வி ஷா இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் ஷுப்மான் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘மாற்று தொடக்க வீரராக அணியில் இருந்து கொண்டும், ஆடும் லெவனில் இடம் கிடைக்காமல் இருக்கும் ஷுப்மான் கில்லுக்கு கட்டாயம் வாய்ப்பு கொடுக்க வேண்டும். மயங்க் அகர்வால் டெஸ்ட் பேட்ஸ்மேன் மற்றும் டாப் ஆர்டர் வீரர் என்பதை நிரூபித்துவிட்டார். அவர் போட்டியை பற்றி நன்கு புரிந்து கொண்டுள்ளார். அவர் மூன்று ஒருநாள் மற்றும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி உள்ளார். இதனால் அவரை நீங்கள் நீக்கி விட முடியாது.

ஷுப்மான் கில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிறப்பாக விளையாடியுள்ளார். மயங்க் அகர்வால் மற்றும் ஷுப்மான் கில் ஆகியோர்தான் தொடக்க வீரர்களாக களம் இறங்க வேண்டும்’’ என்றார். நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கெதிரான முதல் போட்டியில் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்கிய ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்தார். தொடக்க வீரராக களம் இறங்கிய 2-வது போட்டியில் சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து