தமிழகத்தில் எந்தவொரு ரேஷன் கடையிலும் பொருள் வாங்கும் திட்டம் விரைவில் அமல் : சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2020      தமிழகம்
Budget 2020 02 14

Source: provided

சென்னை : தமிழ்நாட்டில் எந்த ரேஷன் கடையிலும் தங்களுக்குரிய பொருட்களை வாங்கி கொள்ளும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். பட்ஜெட் உரையில் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பதாவது:–

கூட்டுறவு நிறுவனங்கள் தமிழ்நாட்டின் ஊரகப் பொருளாதாரத்திற்கு திறம்பட உதவி வருகிறது. நடப்பு 2019 - 2020 ம் நிதியாண்டில் பயிர்க் கடன்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட 10,000 கோடி ரூபாய் இலக்கில் இதுவரை 7,595.59 கோடி ரூபாய் 10.6 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நியாயமான விலையை பெறுவதற்கும், நுகர்வோருக்கு குறைந்த விலையில் விளைபொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும், பழங்கள், காய்கறிகள் மற்றும் பிற பண்ணை விளைபொருட்களை நகர்ப்புரங்களில் விற்பனை செய்ய உதவும் வகையில் கூட்டுறவு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. 2020–21ம் நிதியாண்டில் பயிர்க்கடனாக மொத்தம் 11,000 கோடி ரூபாய் கூட்டுறவு அமைப்புகளின் மூலமாக வழங்கப்படும். கடன் தவணைகளை முன்கூட்டியே செலுத்துபவர்களுக்கு முழு வட்டியை தள்ளுபடி செய்ய ஏதுவாக, வரவு–செலவுத் திட்டத்தில் 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு இயற்றப்பட்ட தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்திற்கு உட்பட்டு, தமிழக அரசு அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது. முழுமையாக கணினிமயமாக்கப்பட்ட பொது விநியோக முறை 38.51 கோடி ரூபாய் செலவில் மேலும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் குடும்ப அட்டை வைத்திருப்போர், மாநிலத்தின் எந்தவொரு நியாயவிலைக் கடையிலும் தங்களுக்குரிய பொருட்களை வாங்கிக் கொள்ளும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். இதுவரை, மாநிலம் முழுவதும் 585 நியாய விலைக் கடைகள் அம்மா மினி கூட்டுறவு சிறப்பு அங்காடிகளாக மேம்படுத்தப்பட்டு, 300-க்கும் மேற்பட்ட பொருட்கள் பொதுமக்களின் நலனுக்காக 5 சதவீதம் தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகின்றன.

சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ், 2020 - 21ம் நிதியாண்டிலும் துவரம் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை மானிய விலையில் தொடர்ந்து வழங்கப்படும். 2020-ம் ஆண்டு ஜனவரியில், குடும்பம் ஒன்றிற்கு தலா 1,000 ரூபாயை பொங்கல் பரிசாக வழங்குவதற்காக அரசு ஏற்கெனவே 2,363.13 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளித்துள்ளது. 2020–21ம் நிதியாண்டிற்கான வரவு, செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மொத்தம் 6,500 கோடி ரூபாய் உணவு மானியத்திற்காகவும், பொது விநியோகத் திட்டத்தைச் செயல்படுத்திட கூட்டுறவு நிறுவனங்களுக்கு மானியமாக 400 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து