ராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்கிரஸ் செயற்குழுவில் ஆப்சென்ட்

புதன்கிழமை, 26 பெப்ரவரி 2020      அரசியல்
Rahul 2020 02 26

டெல்லி சட்டசபை தேர்தலில் பெற்ற படுதோல்வி உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பேசுவதற்காக கூட்டப்பட்டுள்ள காங்கிரஸ் செயற்குழுவில் அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் கலந்து கொள்ளாதது கட்சியினரை அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் அக்கட்சி திணறி வருகிறது. இந்நிலையில் பாரம்பரிய கட்சியான காங்கிரசால் டெல்லி சட்டசபை தேர்தலில் தொடர்ந்து 2-வது முறையாக ஒரு இடத்தை கூட கைப்பற்ற முடியவில்லை. அத்துடன் ஓட்டு சதவீதமும் குறைந்துள்ளது. இதற்கிடையில் கட்சி தலைவராக ராகுல் மீண்டும் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இத்தகைய சூழலில் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா தலைமையில் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரியங்கா வாத்ரா, ப.சிதம்பரம், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். பல முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசிப்பதற்காக கூட்டப்பட்டுள்ள இக்கூட்டத்தில் ராகுல் கலந்து கொள்ளவில்லை. அவர் தற்போது இந்தியாவில் இல்லாத காரணத்தால் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது. தலைவர் பதவியில் இருந்து விலகியது முதல் கட்சியின் முக்கிய செயல்பாடுகளில் ராகுல் கலந்து கொள்ளாமல் இருந்து வருவது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி தேர்தல் பிரசாரத்திலும் அவர் முழுமையாக தன்னை ஈடுபடுத்தி கொள்ளாததும் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என காங்கிரஸ் கட்சியினரே பேசி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் நாட்டில் இல்லை என்றால் அவர் எங்கு சென்றார், எப்போது சென்றார் என்ற கேள்வியும் கட்சிக்குள் எழுந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து