முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் முதலீடு செய்திட வாருங்கள்: 3 முன்னணி நிறுவனங்களுக்கு முதல்வர் எடப்பாடி அழைப்பு

திங்கட்கிழமை, 13 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் முதலீடு செய்திட 3 முன்னணி நிறுவனங்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். 

இது குறித்து அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

தமிழக முதல்வர் வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டில் ஈர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.   முதலீடுகளை எளிதாக ஈர்ப்பதற்காக, நாடுகளுக்கான சிறப்பு அமைவுகளை உருவாக்குதல், வெளிநாட்டு தூதுவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தல் மற்றும் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்பு பணிக்குழு (Special Investment Promotion Task Force) அமைத்தல் என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

கொரோனா வைரஸ் பரவல் உலகப் பொருளாதாரச் சூழலில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளால், சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இந்தியாவிற்கு இடம் பெயர்ந்திட முடிவெடுத்துள்ளன.  அண்மையில் 15,128 கோடி ரூபாய் முதலீட்டிற்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டன. 

இது இந்த பேரிடர் காலத்திலும் பன்னாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள தலைசிறந்த இடமாக தமிழ்நாட்டை கருதுவதை எடுத்துக்காட்டுகிறது.  உலகெங்கும் உள்ள முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் தொழில் துவங்க ஈர்ப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.   

தற்பொழுது, பெடக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர், தலைவர் (மற்றும்) முதன்மைச் செயல் அலுவலர் பெரட்ரிக் டபிள்யு ஸ்மித் மற்றும் யு.பி.எஸ். நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் டேவிட் பி அப்னே ஆகிய 2 முன்னணி லாஜிஸ்டிக்ஸ் (Logistics) நிறுவன தலைவர்களுக்கும் மற்றும்  திருவாளர்கள் சவுதி அரெம்கோ நிறுவனத்தின் தலைவர் அமின் எச் நாசர், எக்ஸன் மொபில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் டாரன் வுட்ஸ் மற்றும் சி.பி.சி. கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஜியா ருயே ஊ ஆகிய 3 முன்னணி பெட்ரோ கெமிக்கல் (Petro Chemical) நிறுவனங்களின் தலைவர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்திட நேரிடையாக அழைப்பு விடுத்து முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். 

அக்கடிதத்தில், தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள பல்வேறு சாதகமான அம்சங்களையும் சிறப்பான தொழில் சூழலையும்  குறிப்பிட்டு, புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பான ஆதரவை நல்கும் என்றும் அவர்களின் தேவைகளுக்கேற்ப ஊக்கச் சலுகைகளை வழங்கிடும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து