தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? சட்டமன்ற தேர்தலில் தற்போது உள்ள கூட்டணி தொடருமா? -முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில்

சனிக்கிழமை, 8 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Edappadi 2020 08 02

Source: provided

சேலம் : தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும். வரும் தேர்தலில் தற்போது உள்ள கூட்டணியே தொடருமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.  

சேலத்தில், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,  

சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அம்மா அறிவித்த திட்டங்கள் பெரும்பாலும் நிறைவு பெற்றுள்ளன. இன்னும் சில திட்டங்கள் விரைவாக நடைபெற்று கொண்டிருக்கின்றன. மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை அம்மாவின் அரசு நிறைவேற்றி வருகிறது.

அம்மாவின் அரசு விவசாயிகளின் பங்களிப்போடு குடிமராமத்து திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று உத்தரவு வழங்கி, அது சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் பருவமழை நன்றாக பெய்து கொண்டிருக்கிறது. அனைத்து அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து கொண்டிருக்கிறது. அனைத்து இடங்களிலும் கால்வாய்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரைகளிலும் அந்தப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறன.

ஒரு சொட்டு நீர்கூட வீணாகாமல் கடைக்கோடியில் இருக்கின்ற விவசாயிகளுக்கும் முழுமையாக தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. உபரியாக வெளியேறும் நீரைத் தடுத்து சேமிப்பதற்கு தடுப்பணைகள் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகிறது என்று அவர் தெரிவித்தார். 

அதை தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதன் விபரம் வருமாறு:-

கேள்வி:- கொரோனா நோய்த் தடுப்பில் களப்பணியில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 50 லட்சம் நிவாரண உதவி தரவேண்டுமென்ற கோரிக்கையை தொடர்ந்து முன் வைத்து வருகிறார்களே?

பதில்:- கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு, நேரடியாக சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிட்டால், ரூபாய் 50 லட்சம் வழங்கப்படுமென நான் ஏற்கனவே அறிவித்தேன். மத்திய அரசாங்கமே அதனை இன்ஷ்யூரன்ஸ் மூலம் கொடுப்பதாக அறிவித்து விட்டார்கள்.

மற்றப் பணியாளர்களுக்கு ரூபாய் 10 லட்சம் என்று அறிவித்தோம். அதனை தற்போது ரூபாய் 25 லட்சமாக உயர்த்தியுள்ளோம். பிற பணியாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றுப் பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது தொற்று ஏற்பட்டு இறந்தால் அவர்களுக்கு 25 லட்ச ரூபாய் கொடுக்கிறோம், குடும்பத்தில் தகுதியுள்ளவர்களுக்கு வேலை கொடுக்கிறோம்.

கேள்வி:- தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படாது என்று ஏற்கனவே உறுதியாக சொல்லியுள்ளீர்கள். ஆனால், மத்திய அரசு அதை நிச்சயமாக நிறைவேற்றும், மாநில அரசு தடுக்க முடியாதென்று தெரிவித்துள்ளதற்கு தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன?

பதில்:- மாநில அரசின் நிலைப்பாடு இருமொழிக் கொள்கை. தமிழ், ஆங்கிலம் தான். அதை அரசு தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. அண்ணா, எம்.ஜி.ஆர், அம்மா ஆகியோர் காலத்திலிருந்து கடைபிடித்து வந்ததை அம்மாவின் அரசும் தொடர்ந்து பின்பற்றி நடைமுறைப்படுத்தும். அதற்கென்று ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு, இதன் சாதக பாதகங்களை கண்டறிந்து அளிக்கும் அறிக்கையின்படி அரசு செயல்படும்.

கேள்வி:- பள்ளிகள் எப்பொழுது திறக்கப்படும்?

பதில்:- கொரோனா வைரஸ் பரவல் இன்னும் குறையவில்லை. இது உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சனை. குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டுமென்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றார்கள்.

முதலில் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆகவே, இந்தியா முழுவதுமுள்ள நிலைமைக்கு ஏற்றவாறு தமிழ்நாடும் செயல்படும். நம்முடைய மாநிலத்தை பொறுத்தவரை, மக்களைக் காக்க வேண்டும், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நிலைமை சீராகும்பொழுது நிச்சயமாக பள்ளிகள் திறக்கப்படும்.

கேள்வி:- நீலகிரி மாவட்டத்தில் மழையின் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?

பதில்:- நான் ஏற்கனவே இதுகுறித்து தெளிவாகத் தெரிவித்துள்ளேன். மழை அதிகமாகும்பொழுது மலைச்சரிவு ஏற்படுகிறது. கேரளாவில்கூட கனமழை காரணமாக பல வீடுகள் மலைச்சரிவில் சரிந்து சுமார் 80-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதாகவும், சுமார் 15 நபர்கள் இறந்திருப்பதாகவும் தெரிவிக்கின்றார்கள்.

அதுபோல நம்முடைய மாநிலத்தில், நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்தக் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களை பள்ளிகளில் தங்கவைத்து அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் பிற வசதிகளை செய்து கொடுத்துள்ளோம். போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று அரசு இயந்திரம் முடுக்கிவிடப்பட்டு, பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

கேள்வி:- இ-பாஸ் முறையில் ஏதேனும் மாற்றம் செய்யப்படுமா?

பதில்:- இ-பாஸ் குறித்து நான் ஏற்கனவே தெளிவாகத் தெரிவித்துள்ளேன். இதற்காக மாவட்டங்களில் ஏற்கனவே ஒரு குழு இயங்கி வந்தது. இ-பாஸ் உடனடியாக வழங்க வேண்டும் என்பதற்காக கூடுதலாக ஒரு குழு அமைக்கப்பட்டு, இப்பொழுது 2 குழுக்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

மக்கள், அத்தியாவசியத் தேவைக்கு மட்டும் இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்தால் உடனடியாக வழங்குவதற்குண்டான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இ-பாஸ் வழங்குவதற்கு எளிமையான முறையை கடைபிடிக்க வேண்டுமென்று மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது. 

கேள்வி:- சென்னையில் கூடுதல் தளர்வுகள் இருக்குமா?

பதில்:- ஏற்கனவே சென்னைக்கு போதுமான தளர்வைக் கொடுத்துள்ளோம். ஊரடங்கு என்பது ஒரு கட்டுப்பாடுதான். கொரோனா ஒரு புதிய தொற்று நோய். ஊடக நண்பர்களில் பலர் பாதிக்கப்பட்டு, ஒருவர் இறந்தும் உள்ளார்.

இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. எனவே, தனிமைப்படுத்திக் கொள்வதுதான் இதற்கு மருந்து. உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத் துறை, ஐ.சி.எம்.ஆர்., நம்முடைய மருத்துவ நிபுணர்கள் ஆகியோர் தெரிவிக்கின்ற ஆலோசனைகளின் அடிப்படையில்தான் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொருவரும், தாங்களாக, அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளைப் பின்பற்றினால் நாம் இயல்பு நிலைக்கு எளிதாகத் திரும்பி விடலாம். இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடித்திருந்தால் மருந்தை உடம்பில் செலுத்தி குணமடையச் செய்து விடலாம். பிளாஸ்மா சிகிச்சை நாம் மேற்கொண்டு வருகிறோம்,

அது நல்ல பலனை அளிக்கிறது. சென்னையில் 57 நபர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சையைக் கொடுத்திருக்கிறோம். பெரும்பாலானவர்கள் குணமடைந்து இருக்கிறார்கள்.

எனவே, தொற்று ஏற்பட்டு குணமடைந்து வீடு திரும்பி 14 நாட்கள் கழித்து பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும். கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்தால் குணமடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். 

கேள்வி:- மேட்டூர் கால்வாய்ப் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா?

பதில்:- இப்பொழுதுதான் அணையில் தண்ணீர் உயர்ந்து கொண்டிருக்கிறது. தண்ணீர் ஓரளவு வந்தவுடன் மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்குக் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும்.

கேள்வி:-  தமிழகத்தில் இதே கூட்டணி தொடருமா?

பதில்:- தேர்தல் வருகின்ற காலத்தில் அதைப்பற்றி பேசலாம். 

கேள்வி:- தமிழக முதல்வரையும், தமிழக அரசையும் பா.ஜ.க. பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.  நீங்கள் அதற்கு பதில் கொடுத்தும், தமிழக அரசை விமர்சனம் செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? 

பதில்:-  அவரை ஒரு பெரிய அரசியல் கட்சித் தலைவராக நாங்கள் எண்ணவில்லை. அவர் பாரதீய ஜனதா கட்சியில் இருப்பதாகச் சொன்னால், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மத்தியில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் நாங்களெல்லாம் வீடு, வீடாகச் சென்று ஓட்டு கேட்டோம்.

அவர் எங்கு போய் ஓட்டு கேட்டார்? எங்கேயும் கேட்கவில்லையே? பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இந்திய பிரதமராக வரவேண்டுமென்று அ.தி.மு.க. தலைமையில் பாரதீய ஜனதா மற்றும் சில கட்சிகளெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து கூட்டணி அமைத்துப் போட்டியிட்டோம்.

அப்பொழுது எந்த இடத்திலும் அவர் பிரச்சாரம் செய்தததாகத்  தெரியவில்லை. அவரை ஒரு கட்சித் தலைவராக நாங்கள் கருதவில்லையென்று ஏற்கனவே சொல்லிவிட்டேன். எனவே அதற்கு பதிலளிக்கத் தேவையில்லை.

அப்படி அவர் ஒரு கட்சியினுடைய தலைவராக இருந்தால், ஏன் இந்த நாட்டினுடைய பாரதப் பிரதமர் மோடியின் வெற்றிக்காக அவர் பாடுபடவில்லை? ஒவ்வொரு பொறுப்பாளரும் அவருடைய கட்சித் தலைவர், பதவிக்கு வர வேண்டும் என்றுதான் அந்தக் கட்சியில் இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட நிலையிலும் அவர் வெளியில் வந்து பிரச்சாரம் செய்யவில்லையே? அதனால் நாங்கள் அவரை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து