மணிப்பூரில் 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா

செவ்வாய்க்கிழமை, 11 ஆகஸ்ட் 2020      இந்தியா
Manipur 2020 07 29

Source: provided

இம்பால் : மணிப்பூர் சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் ஆறு பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

மணிப்பூர் சட்டசபையில் நேற்று முன்தினம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் என். பிரேன் சிங் ஆட்சி வெற்றி பெற்றது. வாக்கெடுப்பின்போது காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்களுக்கு எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று அக்கட்சியின் கொறடா உத்தரவு பிறப்பித்திருந்தார்.

ஆனால், 8 எம்.எல்.ஏ.-க்கள் அவரது உத்தரவை மீறி சட்டசபை கூட்டத்தை புறக்கணித்தனர். இந்நிலையில் நேற்று ஆறு எம்.எல்.ஏ.-க்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளனர்.

ஆனால் இதுவரை ராஜினாமா ஏற்கப்படவில்லை.  தனிக்கட்சியாக மெஜாரிட்டி இருந்தும் ஆட்சியமைக்க தோல்வியடைந்ததாக மாநில காங்கிரஸ் தலைவர் இபோபி சிங் மீது குற்றம்சாட்டினர்.  

முன்னதாக, மணிப்பூர் மாநிலத்தில் 2017-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் பா.ஜ.க.வுக்கு 21 இடங்கள் கிடைத்தன. சுயேச்சைகள் மற்றும் பிற கட்சிகளின் எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவோடு பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. முதல்வராக பிரேன் சிங் உள்ளார்.

இந்நிலையில், ஆளும் பா.ஜ.க.வை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் சேர்ந்தனர். தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள், ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ., திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றனர். ஆனால் தேசிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினர்.

அதன்பின், தங்கள் முடிவை திரும்பப் பெறுவதாகவும் அரசுக்கு மறுபடியும் ஆதரவு அளிப்பதாகவும் கூறினர்.  எனினும், பா.ஜ.க. அரசுக்கு போதிய பெரும்பான்மை இல்லை எனக்கூறி வந்த காங்கிரஸ், பா.ஜ.க. அரசுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தது. 

இதன்படி, அம்மாநில சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. குரல் வாக்கெடுப்பு மூலம் நடைபெற்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் பிரென் சிங் பெரும்பான்மையை நிரூபித்தார். இதன்மூலம், மணிப்பூரில் நிலவி வந்த அரசியல் பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து