முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்வி உரிமை சட்டத்தின்படி ஒதுக்கப்படும் 25 சதவீத இடங்களில் வேறு மாணவர்களை நிரப்பக்கூடாது: ஐகோர்ட்டு உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 8 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்படும் 25 சதவீத இடங்களில் வேறு மாணவர்களை நிரப்பக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் 6 முதல் 14 வரையிலான வயதுடையவர்களுக்கு, தனியார் பள்ளிகளில் உள்ள மாணவர் சேர்க்கைக்கான இடங்களில் ஒவ்வொரு ஆண்டும் 25 சதவிகிதம் ஒதுக்கப்படுகிறது.

அதற்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் 2-ம் தேதி தொடங்கி மே 29-ம் தேதியுடன் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த நடைமுறையை பின்பற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. 

இந்நிலையில் இதுதொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் அதன் மாநில செயலாளர் முகம்மது ரசின் பொதுநல மனு ஒன்றை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், கொரோனா தாக்கத்தால் கடந்த மார்ச் மாதம் இறுதியிலிருந்தே பள்ளிகள் மூடப்பட்டு, எப்போது திறக்கப்படும் என முடிவெடுக்கப்படாத நிலை உருவாகி உள்ளது.

இந்த ஆண்டு கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் உள்ள இடங்கள் எவ்வாறு நிரப்பப்படும் என தமிழக அரசு இதுவரை எந்த அறிவிப்போ அல்லது தெளிவுபடுத்துதலையோ வழங்கவில்லை.

தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை தொடங்கி உள்ளதும், கல்வி கட்டணத்தில் 40 சதவிகிதத்தை வசூலிக்கலாம் என ஜூலை 17-ம் தேதி ஐகோர்ட்  பிறப்பித்த உத்தரவும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் இடம் கிடைக்கும் என நம்பியுள்ள பெற்றோரை சிரமத்தில் ஆழ்த்தி உள்ளது. 

எனவே கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள 25 சதவிகித இலவச மாணவர் சேர்க்கை இடங்கள் நிரப்புவதற்கான நடைமுறைகளையும், கால அட்டவணையையும் தமிழக அரசு வெளியிட உத்தரவிட வேண்டும். அவற்றை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் விளம்பரபடுத்த வேண்டும் என அந்த மனுவில் அவர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நேற்று நடைபெற்றது. விசாரணையின் முடிவில் கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்படும் 25 சதவீத இடங்களில் வேறு மாணவர்களை நிரப்பக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

அரசின் கால அட்டவணையை தலா ஒரு தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் வெளியிட வேண்டும் எனவும் மாணவர் சேர்க்கையை கண்காணிக்கும் குழுவின் அதிகாரிகள் குறித்த விவரங்களையும் வெளியிட வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் நிரப்பப்படாத இடங்களின் விவரங்களை பள்ளி வாரியாக வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து