அம்மா நகரும் நியாய விலை கடைகளின் வாகனங்கள்: முதல்வர் எடப்பாடி கொடியசைத்து துவக்கி வைத்தார்

திங்கட்கிழமை, 21 செப்டம்பர் 2020      தமிழகம்
Govt-1-Edappadi 2020 09 21

Source: provided

சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (21.9.2020) தலைமைச் செயலகத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே கொண்டு சென்று விநியோகிக்கும் வகையில் 9 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 3,501 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளின் சேவையினை துவக்கி வைக்கும் அடையாளமாக 7 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளின் வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மேலும், பொது விநியோக திட்டத்தின் கீழ், முன்னோட்ட அடிப்படையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்து நிறைந்த அரிசி வழங்கும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக ஆறு குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசிப் பைகளை வழங்கினார்.

கடந்த 24.2.2014 அன்று சென்னையில் நகரும் நியாய விலைக் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் திட்டத்தை அம்மா துவக்கி வைத்தார். மக்கள் எளிதில் அணுக இயலாத பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தற்போது 48 நகரும் நியாயவிலைக் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் அவர்கள் வசிக்கும் இடங்களுக்கே சென்று வழங்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் 277 கிராமங்கள் மற்றும் சென்னையில் 54 தெருக்களில் வசிக்கும் 27,420 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெற்று வருகின்றனர்.

மேலும், திருப்பூர், திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், தருமபுரி, ஈரோடு, நாமக்கல், சேலம், திருநெல்வேலி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த மலை கிராமங்கள் பயன் பெறுகின்றன. 

இந்த திட்டத்தினை மேலும் விரிவுபடுத்தும் வகையில், தமிழக முதல்வர் 20.3.2020 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், பல்வேறு தரப்பிலிருந்து வரப்பெற்ற கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கும் பொருட்டு 3,501 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் ரூபாய் 9.66 கோடி மதிப்பீட்டில் துவக்கப்படும் என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாட்டில் உள்ள  37  மாவட்டங்களைச் சேர்ந்த  5,37,315 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில், அவர்களது குடியிருப்புகளுக்கு அருகிலேயே சென்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கிட  9 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 3,501 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளின் சேவையினை துவக்கி வைக்கும் அடையாளமாக 7 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளின் வாகனங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த நடமாடும் நியாயவிலைக் கடைகள் மூலம், மாதம் ஒருமுறை குடும்ப அட்டைதாரர்களுக்கு வசதியான, அரசால் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில், தாய் கடையின் விற்பனையாளர் நேரில் சென்று அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்வர். 

மேலும், பொது விநியோக திட்டத்தின் கீழ், முன்னோட்ட அடிப்படையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்து நிறைந்த அரிசி வழங்கும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆறு குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசிப் பைகளை வழங்கினார். 

செறிவூட்டப்பட்ட அரிசியானது இரும்பு, போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 போன்ற நுண்ணூட்ட சத்துக்களை கொண்ட ஊட்டச்சத்து மிகுந்த அரிசியாகும்.  இது பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் உட்பட அனைவருக்கும் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், இரத்த சோகையைப் போக்கிடவும் உதவுகிறது. 

இத்திட்டத்தின் கீழ், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் ஊட்டச்சத்து மிகுந்த செறிவூட்டப்பட்ட அரிசியானது பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 14,500 மெட்ரிக் டன்னும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் மற்றும் சத்துணவுத் திட்டத்தின் மூலம் 500 மெட்ரிக் டன்னும் 1.10.2020 முதல் வழங்கப்பட உள்ளது. இத்திட்டம் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன்  மூன்றாண்டு காலங்களுக்கு செயல்படுத்தப்பட உள்ளது.  

இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, இரா.காமராஜ்,  அமைச்சர் பெருமக்கள், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் சுதாதேவி, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் சஜ்ஜன்சிங் ஆர். சவான், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் முனைவர் சுப்பிரமணியன், கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) கிரேஸ் லால்ரின்டிக்கி பச்சாவ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து