எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு: கமல், ரஜினி - பிரபலங்கள் இரங்கல்

வெள்ளிக்கிழமை, 25 செப்டம்பர் 2020      சினிமா
Kamal-Rajini 2020 09 25

Source: provided

சென்னை : பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவுக்கு நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான், ஆர்யா உள்ளிட்ட திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

எஸ்.பி.பி. மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கமல்ஹாசன் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், வெகுசில பெரும் கலைஞர்களுக்கே தான் வாழும் காலத்திலேயே அவர் திறமைக்கு தகுந்த புகழ் கிடைக்கும்.

அப்புகழ் கிடைக்கப் பெற்றவர் என் உடன்பிறவா அண்ணன் எஸ்.பி.பி.. நாடு தழுவிய புகழ் மழையில் நனைத்தபடியே அவரை வழி அனுப்பி வைத்த அவரின் அத்தனை ரசிகர்களுக்கும் அவர்களின் ஒருவனான என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.. 

அவர், நனைந்த மழையில் என்னையும் நனைய அனுமதித்ததற்கு நன்றி. அவரின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேரு. பலமொழிகளில் நான்கு தலைமுறை திரை நாயகர்களின் குரலாக வாழ்ந்தவர், ஏழு தலைமுறைக்கு அவர் புகழ் வாழும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவிற்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.  மேலும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடனான தனது கலைப்பயணத்தையும் ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் எஸ்.பி.பி.யின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோவில், என்னுடைய குரலாக பல ஆண்டுகள் ஒலித்தீர்கள். உங்கள் குரலும், நினைவுகளும் என்றென்றும் என்னுடன் வாழும். நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன். நம்முடன் இனி எஸ்.பி.பி இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. 

எஸ்.பி.பி. பாடலுக்கு ரசிகர்களாக இல்லாதவர்கள் இந்தியாவிலேயே இல்லை. அவரது கம்பீரமான குரல் நூற்றாண்டுக்கும் மேல் ஒலித்துக்கொண்டே இருக்கும். அவரது மனிதநேயத்தை அனைவரும் நேசித்தார்கள். எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது. இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

அவரது மறைவுக்கு ஏ. ஆர். ரஹ்மான், நடிகர்கள் ஆர்யா, ஜெயம் ரவி, அருண் விஜய், பிரசன்னா, கவுதம் கார்த்திக் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழ் திரையுலகைக் கடந்து மலையாள திரையுலகைச் சேர்ந்த நிவின் பாலி, பார்வதி உள்ளிட்டவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள், பாடகர்கள் என அனைவரும் எஸ்.பி.பியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து