முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் அபார சாதனை: 738 பேர் தேர்ச்சி பெற்றனர்

சனிக்கிழமை, 17 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 738 பேர் தேர்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 13ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் இருந்து சுமார் 14 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் நேற்று முன்தினம் முடிவுகள் வெளியிடப்பட்டன. நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் www.nta.ac.in, www.ntaneet.nic.in ஆகிய இணையதளங்களில் நேற்று முன்தினம் மாலை வெளியாகின.

இதில் மொத்தம் 7 லட்சத்து 71,500 (56.44 சதவீதம்) பேர் மருத்துவம் படிக்க தகுதி பெற்றுள்ளனர். இதற்கிடையே மாநிலங்களில் தேர்வெழுத விண்ணப்பித்தவர்கள், நீட் தேர்வில் கலந்து கொண்டவர்கள், தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தொடர்பான புள்ளிவிவரம் வெளியிடப்பட்டது.

அதில் தெலங்கானா, திரிபுரா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலத் தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் இருந்தது தெரியவந்தது. இந்நிலையில் தவறான பட்டியல் நீக்கப்பட்டு, திருத்தப்பட்ட புதிய பட்டியல் வெளியானது. 

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு மொத்தம் 1.21 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 99,610 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 57,215 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தமிழகத்தைப் பொறுத்தவரையில் திருப்பூர் மாவட்டம், வெள்ளகோயில் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஜன் 710 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜீவித் குமார், 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். தேசிய அளவில் அரசுப் பள்ளி மாணவர்களில் முதலிடமும் பெற்றுள்ளார்.  

இந்நிலையில் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 738 பேர் தேர்ச்சியடைந்துள்ளதாகவும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 877 பேர் தேர்ச்சியடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.   

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களில் தேர்வெழுதிய 6,692 பேரில் 1,615 மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். மேலும் 4 பேர் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். 15 பேர் 400-500 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் நீட் தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு மேல் 4 பேரும், 400-500 மதிப்பெண்களுக்குள் 15 பேரும், 300-400 மதிப்பெண்களுக்குள் 70 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 300-க்கும் அதிகமான மதிப்பெண்களை 32 மாணவர்கள் மட்டுமே பெற்றிருந்த நிலையில், நடப்பு ஆண்டில் 70 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

இதற்கிடையில் புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில் எந்த குளறுபடியும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் மீது அக்கறை கொண்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் சட்டமன்றத்தில் இந்த இட ஒதுக்கீடு பரிந்துரையை முன்வைத்ததாக அவர் குறிப்பிட்டார். 

தற்போது இந்த மசோதா கவர்னரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதால், இது குறித்து எந்த குழப்பமும் அடையத் தேவையில்லை என்றும், விரைவில் கவர்னர் நல்ல முடிவை தெரிவிப்பார் என்றும் அவர் கூறினார்.

நீட் தேர்வு முடிவில் சண்டிகர் மாநிலம் 75.64 சதவீதம் தேர்ச்சி அடைந்து முதல் இடத்தை பிடித்துள்ளது. 2-வது இடத்தில் டெல்லியும், 3-வது இடத்தில் அரியானா மாநிலமும் பிடித்துள்ளன. தமிழகம் 15 இடத்தை பிடித்தது. கடந்த ஆண்டு 23-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து