ஆமதாபாத்தில் பகல்-இரவு டெஸ்ட் இந்தியா இங்கிலாந்து மோதுகிறது கிரிக்கெட் கங்குலி தகவல்

புதன்கிழமை, 21 அக்டோபர் 2020      விளையாட்டு
Ganguly-2020 10 21

Source: provided

கொல்கத்தா : இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஜனவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் மற்றும் குறுகிய வடிவிலான போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்த தொடரில் ஒரு டெஸ்ட் பகல்-இரவாக நடத்தப்படும் (பிங்க் பந்து டெஸ்ட்) என்றும், அந்த டெஸ்ட் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெறும் என்றும் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நேற்று தெரிவித்தார்.

இதன் மூலம் இந்தியாவில் 2-வது முறையாக பகல்-இரவு டெஸ்ட் அரங்கேறப்போகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையே கொல்கத்தாவில் பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடந்தது.‘

இங்கிலாந்து தொடரை எப்படி எந்தெந்த மைதானங்களில் நடத்துவது என்பதில் சில திட்டங்களை வைத்துள்ளோம். ஆனால் போட்டிக்கு இன்னும் 4 மாதங்கள் இருப்பதால் இப்போதைக்கு எதையும் இறுதி செய்யவில்லை. ஐ.பி.எல். முடிந்ததும் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு செல்ல உள்ளது.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி ஓரிரு நாட்களில் தேர்வு செய்யப்படும். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. அப்போது ரஞ்சி கிரிக்கெட் போட்டியை எப்போது தொடங்குவது என்பது முடிவு செய்யப்படும்’ என்றும் கங்குலி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து