அ.தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்: ஜி.கே.வாசன் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 29 நவம்பர் 2020      தமிழகம்
GK-Vasan 2020 11 08

Source: provided

சென்னை : சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி பிரகாசமாக இருப்பதாக கட்சியின் ஆண்டு விழா கூட்டத்தின் போது, ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 7-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில், கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கட்சி கொடியேற்றி வைத்து தலைமை உரையாற்றினார்.

விழா முடிவில் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நிவர் புயலை எதிர்கொள்ளும் வகையில் மிகச் சிறப்பான திட்டமிடுதலை ஏற்படுத்தி முதல்வர்  எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் எல்லாம் ஒரு சேர கலந்து ஆலோசித்து மிக சிறப்பாக சமாளித்து வெற்றி பெற்று இருக்கிறார்கள். அதற்காக த.மா.கா. சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நிவர் புயல் காரணமாக விவசாயிகள், தாழ்வான இடங்களில் தங்கி இருந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதில் மாற்று கருத்து கிடையாது. அவர்களுக்கு தமிழக அரசு உடனடியாக முதலுதவி செய்து இருக்கிறது. நிவாரணத்தை வழங்குவதற்காக கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மத்தியில் பிரதமரும் நிவாரண நிதியை வழங்கி இருக்கிறார். இவற்றை குறிப்பிட்ட காலக்கெடுக்குள் மக்களுக்கு வழங்க வேண்டும்.

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிக் கூட்டணியில் த.மா.கா. செயல்பட்டு கொண்டு இருக்கிறது. ஜனவரி 1-ம் தேதி முதல் தேர்தல் பணிக்கு த.மா.கா. ஆயத்தமாகும்.  கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் கொடுக்க வேண்டும் என்பதை விட கூட்டணி கட்சிகள் கூட்டணியின் முதன்மை கட்சியுடன் இணைந்து அனைத்து இடங்களையும் வெல்ல வேண்டும் என்ற கண்ணோட்டத்தில்தான் த.மா.கா. தேர்தலை சந்திக்கிறது. தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி மேலும் வலுப்பெறும். இந்த கூட்டணிக்கு வெற்றி பிரகாசமாக இருக்கிறது.  இவ்வாறு அவர் கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து