பாரிஸ் நகரம் போர்க்களமானது: பிரான்சில் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை

திங்கட்கிழமை, 30 நவம்பர் 2020      உலகம்
France 2020-11-30

Source: provided

பாரீஸ் : பிரான்சில் மோசமான நோக்கத்துடன் போலீசாரை புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பது தண்டனைக்குரிய குற்றம் என அறிவிக்கும் வகையில் புதிய பாதுகாப்பு மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்படும் என அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதனிடையே கடந்த வாரம் தலைநகர் பாரீசில் கருப்பினத்தை சேர்ந்த இசைக் கலைஞர் ஒருவரை வெள்ளையின போலீஸ் அதிகாரிகள் சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து சர்ச்சைக்குரிய இந்த பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டால் போலீசாரின் மிருகதனத்தை காட்டும் இது போன்ற சம்பவங்களை அம்பலப்படுத்த முடியாமல் போகும் என மசோதா எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

இந்தநிலையில் இந்த பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரீசில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இந்த மோதல் பெரும் வன்முறையாக வெடித்தது.

போலீசார் மீது கற்கள், கண்ணாடி பாட்டில்கள் மற்றும் பட்டாசுகள் உள்ளிட்டவற்றை வீசி தாக்குதலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர். ஆனால் பாரீஸ் நகரம் முழுவதும் போர்க்களமாக காட்சியளித்தது. இந்த வன்முறையில் 60-க்கும் மேற்பட்ட போலீசார் படுகாயம் அடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து