டிராக்டர் பேரணி நடத்த அனுமதிக்க மாட்டோம் : போலீஸ் கமி‌ஷனர்

வெள்ளிக்கிழமை, 22 ஜனவரி 2021      இந்தியா
Agriculture 2020 12 01

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண்மை சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 59-வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு விவசாயிகளிடம் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது. பிறகு 10-வது கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதில் எந்தவித முடிவும் ஏற்படவில்லை.

அப்போது 3 விவசாய சட்டங்களையும் 1½ ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பதாகவும் பிரச்சினைக்கு தீர்வு காண இரு தரப்பினர் கொண்ட குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்துவது என்றும் மத்திய அரசு கூறியது. இது சம்பந்தமாக விவசாய சங்க பிரதிநிதிகள் கூடி ஆலோசனை நடத்தினார்கள். அப்போது மத்திய அரசின் சமரச திட்டத்தை ஏற்பது இல்லை என்று முடிவு செய்தனர். 3 வேளாண் சட்டங்களையும் கண்டிப்பாக வாபஸ் பெற்றே தீர வேண்டும். அதுவரை போராட்டத்தை தொடருவது என்று முடிவு எடுத்தனர்.

விவசாயிகள் போராட்டத்தின் முக்கிய அம்சமாக 26-ந் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் 1 லட்சம் டிராக்டர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பேரணியை நடத்தப் போவதாக விவசாய சங்கத்தினர் அறிவித்து இருந்தனர். மத்திய அரசு சார்பில் குடியரசு தினவிழா டெல்லியில் நடைபெறும் நிலையில், விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக அறிவித்ததால், அது பிரச்சினையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எனவே டெல்லி நகருக்குள் டிராக்டர் பேரணி நடத்த தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. ஆனால் இதை விசாரணைக்கு ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு, டெல்லி போலீசாரே இதுபற்றி முடிவு செய்து கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டது. இதையடுத்து டெல்லி போலீஸ் அதிகாரிகள், விவசாய சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். டெல்லி நகருக்குள் பேரணியை நடத்தக் கூடாது. அதற்கு பதிலாக எல்லை பகுதியில் உத்தரபிரதேசம், அரியானாவில் பேரணியை நடத்திக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

இதை விவசாயிகள் ஏற்க மறுத்துவிட்டனர். டெல்லி நகருக்குள்தான் பேரணியை நடத்துவோம். குடியரசு தின விழாவுக்கு எந்த இடையூறும் செய்யமாட்டோம் என்று கூறினார்கள். ஆனாலும் டெல்லி போலீசார் அவர்களுக்கு இதுவரை அனுமதி கொடுக்க வில்லை. இதுசம்பந்தமாக டெல்லி போலீஸ் கமி‌ஷனர் அலோக்குமார் வர்மா கூறியதாவது:-

டெல்லியில் நடத்தப்படும் குடியரசு தினவிழா என்பது நாட்டின் முக்கியமான விழா ஆகும். அன்றைய தினத்தில் டெல்லியில் வேறு எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி இல்லை.

அவ்வாறு அனுமதித்தால், அது குடியரசு தினவிழாவை பாதிக்க செய்யும். எனவே விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது. அவர்கள் மாற்று இடத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே உத்தரபிரதேசம், அரியானா மாநிலங்களில் டிராக்டர் பேரணியை நடத்த அனுமதிக்கமாட்டோம் என்று அந்த மாநில அரசுகளும் கூறி இருக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து