முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசின் பத்ம விருதுகள் பெற்ற எஸ்.பி.பி. - பாப்பையா உள்ளிட்டோருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 26 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

மத்திய அரசின் பத்ம விருதுகள் பெற்ற தமிழகத்தை சேர்ந்தோருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, 

தேனினும் இனிமையான தனது குரலால் தமிழ்நாட்டு மக்களை மட்டுமன்றி இந்திய மக்களையும் கவர்ந்த பிரபல திரைப்பட பாடகரும், திரைப்பட நடிகரும், எஸ்.பி.பி என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட மறைந்த பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின்  புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக, அவருக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய மகளிர் கூடைப்பந்தாட்ட அணியின் தலைவர் அனிதா பால்துரையின்  விளையாட்டு திறனை அங்கீகரித்து, அவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது  அறிவித்துள்ளது.  திருநெல்வேலியைச் சேர்ந்த வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம், வில்லுப் பாட்டு கலைக்கு ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும் விதமாக மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது  அறிவிக்கப்பட்டுள்ளது.  புகழ் பெற்ற தமிழ் அறிஞர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் திருக்குறளையும், சங்க இலக்கியங்களையும் இனிய தமிழில் நகைச்சுவை கலந்து விளக்கி,  தமிழ் மொழிக்கு  அரும் பணி ஆற்றி வரும் பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது.

தொழில் செய்வதற்கு வயது ஒரு தடையல்ல என்பதற்கு சான்றாக, வயது முதிர்ந்த போதிலும் விவசாயம் செய்யும் கோயம்புத்தூரைச் சேர்ந்த பாப்பம்மாளுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது.  புகழ் பெற்ற கர்நாடக இடைப்பாடகி பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத்தின் இசைச் சேவையை அங்கீகரிக்கும் விதமாக அவர்களுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது  அறிவித்துள்ளது. ஓவிய கலைத்துறையில் சிறந்து விளங்கிய மறைந்த ஓவியர் கே.சி சிவசங்கரை அங்கீகரிக்கும் விதமாக  மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. கரூரைச் சேர்ந்த மாராச்சி சுப்புராமனின் சமூக சேவையினை பாராட்டி அவருக்கு  மத்திய அரசு  பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. 

மருத்துவத் துறையில், சிறப்பாக பணியாற்றி, ஏழை, எளிய மக்களுக்கு மிகக் குறைந்த விலையில் மருத்துவம் அளித்த மறைந்த டாக்டர் திருவேங்கடம்  வீரராகவனின் சேவையினை அங்கீகரிக்கும் விதமாக மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி அறிவித்துள்ளது.  தஞ்சாவூரைச் சேர்ந்த தொழிலதிபர்  ஸ்ரீதர் வேம்பு அட்வெண்ட்நெட் என்ற மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருடைய தொழில் வளர்ச்சியினை அங்கீகரிக்கும் விதமாக மத்திய அரசு பத்மஸ்ரீ விருது  அறிவித்துள்ளது.  சாந்தி கியர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், சாந்தி சமூக அறக்கட்டளையின் நிறுவனருமான மறைந்த சுப்பிரமணியனின் சமூக சேவையினை அங்கீகரிக்கும் விதமாக மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது  அறிவித்துள்ளது.  இந்திய திருநாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு எதிரிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த ஹவில்தார்  பழனிக்கு மத்திய அரசின் விருதான வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  

மத்திய அரசின் பத்ம விபூஷன், பத்மஸ்ரீ மற்றும் வீர் சக்ரா  விருதினை பெற்ற இவர்கள் அனைவருக்கும்  தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும், எனது சார்பாகவும்  வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து