மகராஷ்டிராவில் ஒரே பள்ளியில் 229 மாணவர்களுக்கு கொரோனா

வியாழக்கிழமை, 25 பெப்ரவரி 2021      இந்தியா
maharashtra-school-2021-02-

மகராஷ்டிராவில் வாஷிம் மாவட்டத்தில் ஒரே பள்ளியில் படித்து வரும் 229 மாணவர்களுக்கும், அங்கு பணியாற்றும் 4 ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, அந்தப் பள்ளிக்கூடம் மூடப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனாவில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பெரும்பாலும் யாவத்மால், அமராவதி மாவட்டத்தில் இருந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு மாவட்டங்களிலும் சமீபகாலமாக கொரோனா பரவல் அதிகரித்து அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மகராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மகராஷ்டிராவில் மட்டும் 8,807 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர், 80 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 129 நாட்களுக்குப் பின் 8 ஆயிரத்துக்கும் மேல் பாதிக்கப்பட்டது இதுதான் முதல் முறையாகும். அதேபோல கடந்த ஆண்டு டிசம்பர் 24-ம் தேதிக்குப் பின் 80 பேருக்குமேல் ஒரே நாளில் உயிரிழந்ததும் இதுதான் முதல் முறையாகும்.  இதன் மூலம் மகாராஷ்டிராவில் ஒட்டுமொத்த கொரோனா பரவல் 21.21 லட்சமாக உயர்ந்துள்ளது. ஏறக்குறைய 52 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.  

இந்நிலையில் வாஷிம் மாவட்டத்தில் பாவனா அரசுப் பள்ளியிலும், பள்ளி விடுதியிலும் தங்கியிருந்த 229 மாணவர்கள், 4 ஆசிரியர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவர்களில் பெரும்பாலும், யாவத்மால், அமராவதி மாவட்டங்களிலிருந்து வருகின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  இதையடுத்து, பள்ளிக்கூடம், பள்ளி சுற்றியிருக்கும் பகுதி ஆகியவை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கு முன், கடந்த வாரம் லட்டூர் மாவட்டம், மாரத்வாடா பகுதியில் ஒரு பள்ளியில் 39 மாணவர்களுக்கும், 5 ஊழியர்களுக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.  வாஷிம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில், அங்குள்ள ஒரு கோயிலில் கடந்த திங்கட்கிழமை மக்கள் கொரோனா விதிமுறைகளை மீறி அதிக அளவில் கூடியிருந்தது சர்ச்சையானது. ஆனால், மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கும், போலீஸாருக்கும் முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து