மும்பை : பிரபல நடிகர் அமிதாப் பச்சனுக்கு கண் அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.
அமிதாப் பச்சன் (78), கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு 2020 ஜூலை மாதம் 11-ம் தேதி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்குத் தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் அமிதாப் பச்சன் குணமடைந்து வீடு திரும்பினார். இதன்பிறகு அவர் படப்பிடிப்புகளில் வழக்கம் போல் கலந்துகொண்டு வருகிறார்.
இந்நிலையில் அமிதாப் பச்சனுக்கு கண் அறுவைச் சிகிச்சை நேற்று நடைபெற்றது. இதுகுறித்து தனது வலைத்தளத்தில் அவர் எழுதியுள்ளதாவது:-
இந்த வயதில் கண் அறுவைச் சிகிச்சை என்பது சிக்கலானது. கவனமுடன் கையாள வேண்டியிருக்கிறது. சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பார்வை தெரிவது நிதானமாக நடைபெறுகிறது. எனவே எழுத்தில் பிழை இருக்கலாம்.
முன்னேற்றம் மெல்ல நடைபெறுகிறது. வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி. படிக்கவோ பார்க்கவோ எழுதவோ முடிவதில்லை. எனவே கண்களை மூடி இசையைக் கேட்க முயல்கிறேன் என்று எழுதியுள்ளார்.