சி.பி.எஸ்.இ. தேர்வு தேதி மாற்றம் குறித்து பரிசீலனை: அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்

வெள்ளிக்கிழமை, 5 மார்ச் 2021      இந்தியா
Ramesh-Pokriyal 2021 03 05

Source: provided

புதுடெல்லி : ரம்ஜான் நாளில் சி.பி.எஸ்.இ. தேர்வுகள் வரலாம் என்பதால் தேதியை மாற்ற வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தியதை அடுத்து, தேதி மாற்றம் குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருவதாக மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். 

சி.பி.எஸ்.இ. தேர்வுத் தேதிகளை மாற்றுமாறு வெங்கடேசன் எம்.பி. மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், சி.பி.எஸ்.இ. இயக்குநர் ஆகியோருக்கு பிப்ரவரி மாதம் 8-ம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.  அதில், ரம்ஜான் இஸ்லாமியர்களின் முக்கிய திருநாள். இவ்வாண்டு மத்திய, மாநில அரசுகள் மே 14-ம் தேதி ரம்ஜான் விடுமுறையை அறிவித்துள்ளன.

ஆனால் பிறை தென்படுவதை பொறுத்து ரம்ஜான் தேதி ஒரு நாள் முன்னதாகவோ, பின்னதாகவோ மாற வாய்ப்புள்ளது. இதைக் கணக்கில் கொள்ளாமல் சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்புத் தேர்வுகளை மே 13, 15 தேதிகளில் அறிவித்துள்ளது. ரம்ஜான் தேதி மாறும் பட்சத்தில் இஸ்லாமிய மாணவர்கள் சிரமத்துக்குள்ளாவார்கள். எனவே தேர்வு தேதிகளை மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், வெங்கடேசன் எம்.பி.யின் கடிதத்துக்கு மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதிலளித்துள்ளார். அவர் தனது கடிதத்தில், தங்களின் கடிதத்தைப் பெற்றேன். தேர்வுத் தேதிகளை மாற்றுவது குறித்து பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து