முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா 2-வது சுற்றில் மேரிகோம்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மகளிர் குத்துச்சண்டை போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் மேரிகோம் வெற்றி பெற்றார். 51 கிலோ எடைப்பிரிவில் டொமினிகாவின் மிக்குவேலினாவை வீழ்த்தி மேரிகோம் அசத்தினார்.  

முதல் சுற்றில் வென்றதன் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்தியாவின் மேரிகோம் தகுதி பெற்றார்.

மணிகா பத்ரா வெற்றி

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்றுமுன்தினம் கோலாகலமாக தொடங்கியது. இதில் 205 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 

போட்டித்தொடரின் 3-வது நாளான நேற்று மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா 4-3 என்ற செட் கணக்கில் உக்ரைன் வீராங்கனை மார்க்ரெட்டைவை  வீழ்த்தினார்.

ஆடவர் ஹாக்கி அணி தோல்வி

ஆண்களுக்கான ஹாக்கி லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில், ஏ பிரிவுக்கான 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-7 என்ற கோல்கணக்கில் தோல்வி அடைந்தது.

இந்தியா தரப்பில் சிங் தில்பிரீத் 34வது நிமிடத்தில் கோல் அடித்தார். ஆஸ்திரேலிய அணியில் கோவர்ஸ் இரண்டு கோல்களும், பிராண்ட், பெலிட்ஸ், ஓகில்வீ, ஹேவார்டு, பீல் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

மணிஷ் கவுசிக் தோல்வி

3-வது நாளான நேற்று நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் 63 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் மணிஷ் கவுசிக் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார். 

63 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் இங்கிலாந்தின் மெக்கார்க்கிடம் 1-4 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி அடைந்தார்.

இந்திய வீராங்கனைகள் ஏமாற்றம்

டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் 10 மீ ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா சார்பில் யஷாஸ்வினி தேஸ்வால், மானு பாகெர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

யஷாஸ்வினி 13-ம் இடத்தையே பிடித்தார். இதேபோல், மானு பாகெர் 12ம் இடம் பிடித்தார். முதல் 8 வீராங்கனைகள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்பதால் இருவரும் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தனர். சீன வீராங்கனை முதலிடமும், கிரீஸ் வீராங்கனை 2-வது இடமும், ரஷ்ய வீராங்கனை 3ம் இடமும் பிடித்தனர்.

இந்திய மகளிரணி தோல்வி

ஒலிம்பிக் தொடரில் பெண்களுக்கான ஹாக்கி லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. இதில், உலகின் நம்பர் ஒன் அணியான நெதர்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி  5-1 என்ற கோல்கணக்கில் தோல்வி அடைந்தது.

ஆட்டத்தின் 6வது நிமிடத்தில் நெதர்லாந்து ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. அதன்பின்னர் இந்திய வீராங்கனை ராணி ராம்பால் ஒரு கோல் அடித்து சமன் செய்தார். இதனால் முதல் பாதியில் 1-1 என சம நிலையில் இருந்தது. ஆனால் இரண்டாவது பாதியில் நெதர்லாந்து வீராங்கனைகள் ஆக்ரோஷமாக ஆடி 4 கோல்கள் அடித்து வெற்றி பெற்றனர்.

இந்திய வீரர்கள் தோல்வி

ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 6 சுற்றுகளை கொண்ட தகுதி சுற்று போட்டியில் இந்திய வீரர் தீபக் குமார் முறையே 102.9, 103.8, 103.7, 105.2, 103.8, 105.3 என மொத்தம் 624.7 புள்ளிகளை பெற்றார். இதனால், அவர் தரவரிசையில் 26-வது இடத்தை பெற்று இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டார்.

அதேபோல், மற்றொரு இந்திய வீரராக திவ்யான்ஷ் சிங் பன்வார் முறையே 102.7, 103.7, 103.6, 104.6,    104.6, 103.6 என மொத்தம் 622.8 புள்ளிகளை பெற்றார். இதனால், தரவரிசையில் 32-வது இடத்தை பெற்று அவரும் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.

________________

சத்யன் ஞானசேகரன் தோல்வி

ஆடவர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரரும் தமிழகத்தை சேர்ந்தவருமான சத்யன் ஞானசேகரன் மூன்றாவது சுற்றில் தோல்வியடைந்தார். டேபிள் டென்னிஸ் மூன்றாவது சுற்றில் ஹாங் காங் வீரர் சியுவிடம் கடுமையாக போராடினார் சத்யன் ஞானசேகர். 

இந்தப் போட்டி 7 கேம்கள் வரை நீடித்தது. இதில் 7-11, 11-7,11-1,11-4,11-5, 9-11, 10-12, 6-11 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார் சத்யன் ஞானசேகரன். இதனையடுத்து டோக்யோ ஒலிம்பிக்கில் தமிழக வீரர் சத்யன் ஞானசேகரனின் பதக்க கனவு கலைந்தது.

 

___________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து