முக்கிய செய்திகள்

ரிஷப் பண்டுக்கு பயிற்சியளித்த டோனி

rishapant-dhoni

Source: provided

ரிஷப் பண்டுக்கு பயிற்சியளித்த டோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடிய பயிற்சி ஆட்டத்தின் போது இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்டுக்கு கீப்பிங் பயிற்சி கொடுத்துள்ளார். ஆட்டம் நடந்துக் கொண்டிருந்த போது பவுண்டரி லைனுக்கு பக்கமாக டோனி, பண்டுக்கு பயிற்சி கொடுத்துள்ளார். அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன. 

சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான அமீரக ஆடுகளங்களில் கீப்பர் பண்டின் பணி கொஞ்சம் கூடுதலாக தேவைப்படுகிறது. அதன் காரணமாக டோனி தனது அனுபவத்தின் மூலம் கற்றுக் கொண்ட ஆட்ட நுணுக்கங்களை பண்ட் உடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார் என சொல்லப்படுகிறது. டி20 உலகக் கோப்பையின் முதல் எடிஷனை இந்தியா வெல்ல உதவியவர் அப்போதைய இந்திய கேப்டன் டோனி என்பதும் குறிப்பிடத்தக்கது.  

_____________

பீல்டிங் பயிற்சியாளருக்கு

அபய் சர்மா விண்ணப்பம்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி உள்ளார். 20 ஓவர் உலக கோப்பையுடன் அவரது பதவி காலம் முடிவடைகிறது. அவர் மேலும் அந்த பதவியில் நீடிக்க விரும்பவில்லை. முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுகிறார். உலக கோப்பை போட்டிக்கு பிறகு அவர் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கிறார்.

பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வரவேற்று இருந்தது. இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு அபய் சர்மா விண்ணப்பித்து உள்ளார். அணியின் பீல்டிங் பயிற்சியாளராக ஆர்.ஸ்ரீதர் இருந்தார். அவரது பதவிக்கு அபய் சர்மா விருப்பம் தெரிவித்து உள்ளார். 52 வயதான அபய் இந்திய ‘ஏ’ அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்கு பொறுப்பு வகித்து உள்ளார். தேசிய பெண்கள் அணிக்கும் அவரது பங்களிப்பு இருந்துள்ளது. பயிற்சியாளர் பொறுப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 3-ந்தேதி ஆகும்.

_____________

டி-20-ன் சில போட்டிகளை 

தவிர்க்கும் வில்லியம்சன் !

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், முழங்கையில் ஏற்பட்டுள்ள தொந்தரவு காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரில் சில போட்டிகளை மிஸ் செய்ய வாய்ப்பு உள்ளதாக அந்த அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார். அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடாமல் இருந்தார். அதே போல ஐபிஎல் கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணிக்காக கடைசி லீக் போட்டியிலும் அவர் விளையாடவில்லை. 

இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் வில்லியம்சன்னை முன்னெச்சரிக்கை ரீதியாக நாங்கள் களம் இறக்கவில்லை. அவருக்கு முறையான ஓய்வு இருந்தால் நிச்சயம் விளையாட தேறிவிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அதன் காரணமாக அவர் முதல் சில போட்டிகளில் விளையாடுவதை தவிர்க்க வாய்ப்புகள் உண்டு.  வில்லியம்சன் பந்தை ஹிட் செய்வதில் அற்புதமான திறன் படைத்தவர். அதை செய்ய அவருக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்படுகிறது. அவ்வளவு தான்” என பயிற்சியாளர் தெரிவித்தார். 

______________

காஷ்மீர் டி-20 அணியில் 

இடம்பெற்ற உம்ரான் 

ஐபிஎல் போட்டியில் அதிவேகமாகப் பந்துவீசி கவனம் பெற்ற இளம் வீரர் உம்ரான் மாலிக், சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டிக்கான ஜம்மு - காஷ்மீர் அணியில் இடம்பெற்றுள்ளார். சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டி நவம்பர் 4 அன்று தொடங்கி நவம்பர் 22-ல் நிறைவுபெறுகிறது. இப்போட்டிக்கான ஜம்மு - காஷ்மீர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஐபிஎல் 2021 போட்டியில் மணிக்கு 150 கி.மீ.க்கும் அதிகமாகப் பந்துவீசி கவனம் ஈர்த்தார் ஓர் இளம் இந்தியப் பந்துவீச்சாளர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடிய ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரைச் சேர்ந்த 21 வயது உம்ரான் மாலிக், ஆர்சிபி அணிக்கு எதிராக மணிக்கு 152.95 கி.மீ வேகத்தில் பந்துவீசினார். இந்த வருட ஐபிஎல் போட்டியில் 2-வது அதிவேகப் பந்துவீச்சு அதுதான். (முதல் இடம் ஃபெர்குசனுக்கு - 153.63 கி.மீ.).

______________

ஐ.பி.எல் சூதாட்டத்தில் 

ஈடுபட்ட 27 பேர் கைது

பெங்களூருவில் தனியார் விடுதியில் முகாமிட்டு ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 27 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையர் சந்தீப் பாட்டில் கூறியதாவது., கடந்த 15 ஆம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் யார் வெற்றிப் பெறுவார்கள் என்பதை கணிக்குமாறு ஆன்லைன் பந்தய போட்டிகள் நடத்தப்பட்டன.

இதுகுறித்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு புகார் வந்ததைத் தொடர்ந்து தனிப்படையினர் விசாரணை நடத்தினர். இதில் பெங்களூருவில் 5 தனியார் விடுதிகளில் முகாமிட்டிருந்த 27 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 27 பேரையும் பிடித்து விசாரித்த தனிப்படை அதிகாரிகள் அவர்களிடம் இருந்த ரூ. 78 லட்சம் ரொக்கப் பணம், 18 மடிக் கணிணிகள், இதர மின்னணு சாதனங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

_____________

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து