முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வழிகாட்டுதல் குழுவை மறுசீரமைக்க ஓ. பன்னீர் செல்வம் தரப்பு வலியுறுத்தல்

புதன்கிழமை, 24 நவம்பர் 2021      அரசியல்
Image Unavailable

அ.தி.மு.க. வழிகாட்டுதல் குழுவை மறுசீரமைக்க வேண்டும் என்று ஓ. பன்னீர் செல்வம் தரப்பு கூறியதால் கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த நிலையில் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெற்றது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. 

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் இந்த தேர்தல் நடப்பதால், வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் அதற்கான  வியூகம் வகுப்பதற்காக  நேற்று அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்தும்  நடப்பு அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.   

இதனிடையே அ.தி.மு.க. வழிகாட்டுதல் குழுவை மறுசீரமைக்க வேண்டும் என்றும் குழுவில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை 11 லிருந்து 18 ஆக உயர்த்த வேண்டும் என்று ஜே.சி.டி பிரபாகர், மோகன், மனோஜ் பாண்டியன், கோபால கிருஷ்ணன், பாண்டியன் உள்ளிட்ட ஓ.பி.எஸ் தரப்பினர் வலியுறுத்தி உள்ளனர். ஆனால், இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் இதனால் கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது.  மேலும் எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. சரியாக செயல்படவில்லை என்றும் எதிர்க்கட்சியாக பா.ஜ.க. செயல்பட அ.தி.மு.க. அனுமதித்து வருவதாகவும் சிலர் வருத்தம் தெரிவித்துள்ளனர். 

மேலும் அ.தி.மு.க. வை வழிகாட்டுதல் குழுதான் நடத்த வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் வலியுறுத்தியதாகவும், கூட்டத்தில் சிலர்  முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை குழு தலைவராகவோ, அவைத் தலைவராகவோ நியமிக்கலாம் என்றும் கூறியதாகவும் தெரிகிறது.  இதற்கும் எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து