முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா அச்சுறுத்தல்: 6 நாடுகளுக்கு விமான சேவையை நிறுத்தியது பிரிட்டன்

வெள்ளிக்கிழமை, 26 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

புதிய வகை கொரோனா வைரசின் தாக்கம் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக 6 நாடுகளுக்கு விமான சேவையை பிரிட்டன் அரசு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. 

உலகம் முழுவதிலும் பரவிய கொரோனா வைரசின் தாக்கம் தற்போது குறையத் தொடங்கி உள்ளது. பெரும்பாலான நாடுகளில் புதிய பாதிப்பு மிக  குறைந்த அளவிலேயே உள்ளன. எனினும், கொரோனா வைரஸ் அவ்வப்போது உருமாற்றம் அடைந்து வீரியமாக பரவி வருவதால், சூழ்நிலைகளுக்கு ஏற்ப கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன.

அவ்வகையில், புதிதாக உருமாற்றம் அடைந்த B.1.1.529 என்ற வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் இந்த வாரத்தில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், அண்டை நாடுகளான போத்ஸ்வானா உள்ளிட்ட சில நாடுகளுக்கு பரவியிருக்கிறது. இந்த வைரசின் பரவுதல் வேகமும், வீரியமும் மிக அதிகமாக உள்ளது. 

இந்த புதிய வகை வைரசானது, அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக தடுப்பூசி போட்டவர்களுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்நிலையில், புதிய வகை வைரஸ் பிரிட்டனில் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தென் ஆப்பிரிக்கா, நமிபியா, ஜிம்பாப்வே, போத்ஸ்வானா, லெசோத்தோ, எஸ்வாதினி (ஸ்வாசிலாந்து) ஆகிய தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கான விமான சேவையை பிரிட்டன் அரசு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. இந்த உத்தரவு நேற்று பிற்பகல் முதல் நடைமுறைக்கு வந்தது. கடும் பயணக் கட்டுப்பாடுகளை விதித்து அந்த 6 நாடுகளையும் சிவப்பு பட்டியலில் இணைத்துள்ளது. எனினும், இந்த 6 நாடுகளில் இருந்து பிரிட்டன் வருவோர், அரசு அங்கீகாரம் பெற்ற ஓட்டலில் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து