முக்கிய செய்திகள்

உலகின் முதல் உயிருள்ள ரோபோக்களை உருவாக்கிய அமெரிக்க விஞ்ஞானிகள்

ஞாயிற்றுக்கிழமை, 5 டிசம்பர் 2021      உலகம்
American-Robots- 2021 12 05

Source: provided

வாஷிங்டன் : உலகின் முதல் உயிருள்ள ரோபோவை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். 

அமெரிக்காவின் வெர்மாண்ட், டப்ட்ஸ்,ஹார்வர்டு பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக உயிரி ரோபோ ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2020-ம் ஆண்டில் உலகின் முதல் உயிருள்ள ரோபோவை அவர்கள் உருவாக்கினர்.  ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஜீனோபஸ் லேவிஸ் என்ற தவளை இனத்தின் ஸ்டெம் செல்களில் இருந்து உருவாக்கியதால் இதற்கு ஜீனோபாட்ஸ் 1.0 என்று பெயரிடப்பட்டது. இவை ஒரு மில்லி மீட்டருக்கும் குறைவான அகலம் கொண்டவை. பேக் மேன் வடிவிலான இந்த ரோபோக்களால் நகர முடியும். நீந்த முடியும்.

தொடர் ஆராய்ச்சியின் பலனாக கடந்த மே மாதம் ஜீனோபாட்ஸ் 2.0 ரோபோ உருவாக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு ஜீனோபாட்ஸ் 3.0 ரோபோ குறித்த ஆய்வறிக்கையை அமெரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டனர். அதில் கூறியிருப்பதாவது:-

உலகின் பல்வேறு நாடுகளில் இரும்பு, பிளாஸ்டிக்கால் ரோபோக்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் இருந்து வேறுபட்டு உயிரி ரோபோக்களை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றிருக்கிறோம். இப்போது ஜீனோபாட்ஸ் 3.0 ரோபாவை உருவாக்கியுள்ளோம். இவற்றால் குழந்தைகளை பெற்றெடுக்க முடியும். இந்த ரோபோ ஆராய்ச்சியின் மூலம் விபத்தில் படுகாயமடைந்த மனிதர்களை குணப்படுத்த முடியும். பிறவி குறைபாடுகள், புற்றுநோயை குணப்படுத்த முடியும். முதுமை பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும் என்று நம்புகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் டூக் பல்கலைக்கழக பேராசிரியர் நிடா பாராஹனி கூறும் போது, ஜீனோபாட்ஸ் ரோபோவால் தன்னைப் போன்றே குழந்தையை பெற்றெடுக்க முடியும் என்றால் அது ஆபத்தானது. இவை ஆய்வகத்தில் இருந்து தப்பி பூமியில் பல்கிப் பெருக வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில் இவற்றின் இனப்பெருக்கம், செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பதை கணிக்க முடியாது. செயற்கையாக உருவாக்கப்பட்ட உயிரி ரோபாவால் மனித குலத்துக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே ஆபத்தான ஆராய்ச்சியை நிறுத்த வேண்டும். மனித குலத்தின் நன்மைக்காக அனைத்து உயிரி ரோபோக்களையும் அழித்துவிட வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து