முக்கிய செய்திகள்

புதுவையில் தடுப்பூசி கட்டாய சட்டம் அமலுக்கு வந்தது : சுகாதாரத்துறை அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 5 டிசம்பர் 2021      இந்தியா
Vaccine-2021-10-28

Source: provided

புதுச்சேரி : கொரோனாவை தடுக்கும் வகையில் புதுச்சேரியில் கட்டாய தடுப்பூசி சட்டம் உடனடியாக அமல்படுத்தப்படுகிறது. இதை மீறுபவர்கள் சட்ட விதிகளின் படி தண்டிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதுவையில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.  கொரோனா தொற்றை தடுக்க 100 சதவித தடுப்பூசி போட்ட யூனியன் பிரதேசமாக மாற்ற புதுவை அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இற்காக தடுப்பூசி சிறப்பு முகாம்களை அரசின் சுகாதாரதுறை தொடர்ந்து நடத்தி வருகிறது. அதோடு, வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியும் நடக்கிறது. இதுவரை முதல் தவணை தடுப்பூசியை 7 லட்சத்து 74 ஆயிரம் பேரும், 2வது தவணை தடுப்பூசியை 4 லட்த்து 48 ஆயிரம் பேரும் செலுத்தியுள்ளனர். ஒட்டு மொத்தமாக 77 சதவிதத்தினர் தடுப்பூசி போட்டுள்ளனர். மீதமுள்ள 23 சதவீதத்தினரையும் செலுத்த வைக்க பல்வேறு முய்ற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே தற்போது உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. ஒமைக்ரான் வைரஸ் தொடர்பான முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் பாதிப்பு அதிகமாக ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக புதுவையில் தொற்று நோய் பரவுதல் தடுப்பு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.  புதுவை பொது சுகாதார சட்டம் 1973-ன் பிரிவு 54(1) விதியின் கீழ் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். 2 தவணை தடுப்பூசியும் செலுத்தியிருக்க வேண்டும்.  

இது தொடர்பாக சுகாதார துறை இயக்குனர் ஸ்ரீராமலு கூறியதாவது:-

கொரோனாவை தடுக்கும் வகையில் கட்டாய தடுப்பூசி சட்டம் உடனடியாக அமல்படுத்தப்படுகிறது. இதை மீறுபவர்கள் சட்ட விதிகளின் படி தண்டிக்கப்படுவார்கள். தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களில் சுற்றி வருவதால் கொரோனா பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.  இதனால் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை பொது இடங்களுக்கு வருபவர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டும்.  வெளியே நடமாடுபவர்களிடம் சான்றிதழ் உள்ளதா.? என சோதனை செய்யவும் திட்டமிட்டுள்ளோம். தடுப்பூசி செலுத்தாதவர்கள் வெளியே சுற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும்.  இவ்வாறு ஸ்ரீராமலு கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து