முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கலுக்கு சொந்த ஊர் சென்ற 7 லட்சம் பேர் சென்னை திரும்ப இன்று முதல் 3,797 சிறப்பு பஸ்கள் இயக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர் சென்றவர் சுமார் 7 லட்சம் பேர் மீண்டும் சென்னை திரும்புவதற்கு இன்று முதல் 19-ம் தேதி வரை 3,797 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு சென்று வருவதற்காக தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதன்படி கடந்த 11, 12, 13-ம் தேதிகளில் 3 நாட்களுக்கு சுமார் 17 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. லட்சக்கணக்கானவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

சென்னையில் இருந்து 11, 12, 13-ம் தேதிகளில் 3 நாட்களுக்கு மொத்தம் 8126 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதன் மூலம் சுமார் 3½ லட்சம் பேர் பொங்கல் கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இது தவிர ரெயில்கள் மற்றும் கார்கள் மூலமாகவும் பலர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

அந்த வகையில் சென்னையில் இருந்து மட்டும் சுமார் 7 லட்சம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றிருப்பது தெரிய வந்தது. இதே போன்று பல்வேறு ஊர்களில் இருந்து பிற ஊர்களுக்கு 4,739 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அந்த பஸ்களின் மூலம் சுமார் 3 லட்சம் பேர் பயணம் செய்தனர். ஒட்டு மொத்தமாக தமிழகம் முழுவதும் சுமார் 10 லட்சம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றிருப்பார்கள் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

இன்று முதல் சொந்த ஊர்களில் இருந்து திரும்புவதற்கு பொதுமக்கள் வசதிக்காக தமிழக அரசு சிறப்பு பஸ்கள் இயக்கும் வசதியை செய்துள்ளது. இன்று முதல் 19-ம் தேதி வரை 3 நாட்களுக்கு இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். முன்பதிவு செய்தவர்கள் எளிதாக சிரமமின்றி திரும்பி வர இந்த நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து சென்றுள்ள சுமார் 7 லட்சம் பேர் திரும்பி வருவதற்காக இன்று முதல் 19-ம் தேதி வரை 3,797 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. கூட்ட நெரிசலை தவிர்க்க இந்த பஸ்களில் முன்பதிவு செய்யலாம் என்று தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை தவிர மற்ற ஊர்களுக்கு திரும்புவதற்காக இன்று முதல் 3 நாட்களுக்கு 6,612 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த பஸ்கள் மூலம் சுமார் 4 லட்சம் பேர் பயன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று (திங்கட்கிழமை) வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக 5,655 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். நாளை 18-ம் தேதி தினசரி பஸ்களான 2,100 பஸ்களுடன் கூடுதலாக 3,214 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். 19-ம் தேதி 2,100 தினசரி பஸ்களுடன் சிறப்பு பஸ்களாக 1,540 பஸ்கள் இயக்கப்படும். மொத்தத்தில் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் 16,709 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

கொரோனா கட்டுப்பாடு காரணமாகவும், 18-ம் தேதி தைப்பூசம் காரணமாகவும், 19-ந் தேதிக்கு பிறகு திரும்பி வர பலர் திட்டமிட்டு உள்ளனர். எனவே 19, 20-ந் தேதிகளில் பஸ்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அப்படி பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அதற்கேற்ப கூடுதல் பஸ்கள் விடப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

தென் மாவட்டங்களில் இருந்து பொங்கல் விடுமுறை முடிந்து நேற்று இரவு முதல் சென்னைக்கு மக்கள் திரும்புவார்கள். இது போன்ற பண்டிகை காலங்களின்போது பெருங்களத்தூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாகவே உள்ளது. இந்த நிலையில் பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

வண்டலூரில் இருந்து பெருங்களத்தூர் வரை போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதியில் சாலை பணிகள் முடிந்துள்ள நிலையில் ஒரே நேரத்தில் 4 ஆம்னி பஸ்கள் செல்லும் அளவுக்கு வழி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இருப்பினும் பெருங்களத்தூர் பகுதியில் பாலம் வேலை நடைபெறுவதால் அங்கு மட்டும் சாலை குறுகலாக இருப்பதால் அந்த இடத்தில் நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனை கருத்தில் கொண்டு இன்று அதிகாலையில் 50 காவலர்கள் அங்கு நிறுத்தப்பட உள்ளனர். அவர்கள் போக்குவரத்து நெரிசலை சரி செய்து வாகனங்களை அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட உள்ளனர். அதிகளவில் நெரிசல் ஏற்பட்டால் கனரக வாகனங்கள் வண்டலூர் மேம்பாலத்தில் இருந்து படப்பை, வெளிவட்ட சாலை வழியாக திருப்பி விடப்படும். பெருங்களத்தூரில் இறங்கி பெரும்பாலான வர்கள் தாம்பரம், கிண்டி உள்ளிட்ட இடங்களுக்கு செல்வார்கள்.

இதுபோன்று மக்களின் வசதிக்காக சிறப்பு மாநகர பஸ்களை இயக்கவும் முடிவு செய்யப்பட்டுஇருக்கிறது. இந்த பஸ்களில் பொதுமக்கள் பெருங்களத்தூரில் இருந்து தாம்பரம் பயணம் செய்யலாம். இதன் மூலம் அங்கிருந்து ரெயில், பஸ் உள்ளிட்ட மற்ற வாகனங்களில் தங்களது இருப்பிடங்களுக்கு பொதுமக்கள் எளிதாக செல்ல முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து