முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உலகிலேயே உயரமான முத்துமலை முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் : ஹெலிகாப்டர் மூலம் அர்ச்சனை

புதன்கிழமை, 6 ஏப்ரல் 2022      ஆன்மிகம்
Murugan-Temple 2022 04 06

Source: provided

சேலம் : சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உலகிலேயே உயரமான முத்துமலை முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. அப்போது ஹெலிகாப்டர் மூலம் முருகனுக்கு அர்ச்சனை செய்யப்பட்டது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புத்திர கவுண்டம்பாளையம் முத்துமலை முருகன் கோவில் திருப்பணி கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கியது. முருகன் சிலை வடிவமைக்க திருச்செந்தூர், பழமுதிர்ச்சோலை, பழனி என ஆறுபடை முருகன் ஸ்தலங்களில் இருந்து மண் கொண்டுவரப்பட்டு மலேசியாவில் முருகனை வடிவமைத்த தியாகராஜ ஸ்தபதி அவர்களால் முருகன் திருவுருவச்சிலை கட்டும் பணி துவங்கியது.

கடந்த ஆறு ஆண்டுகளாக கட்டும் பணி நடைபெற்று வந்த நிலையில் நேற்று கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த மூன்று நாட்களாக யாக சாலைகள் அமைக்கப்பட்டு ஏராளமான சிவாச்சாரியாரை கொண்டு வேதங்கள் முழங்க யாகங்கள் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நாளான நேற்று கும்பாபிஷேக தினத்தில் பல்வேறு விதமான சிறப்பு யாகங்கள் நடைபெற்று பூர்ணாஹுதி நடைபெற்றது. பிறகு பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தத்தை யாகசாலையில் வைக்கப்பட்டு பூஜை நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து திருவாரூர் சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார் உள்ளிட்ட ஏராளமான குருக்கள் கலந்துகொண்டு தீர்த்தத்தை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. மேள, தாளம் இசைக்க மங்கள வாத்தியம் முழங்க 146 அடி முத்து மலை முருகனுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் முருகனுக்கு பூக்கள் தூவப்பட்டது. பின்னர் அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு தீர்த்தங்கள் தெளிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு 146 முருகனுக்கும் உற்சவ மூர்த்தியான முருகனுக்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

இந்த உலகிலேயே மிகப் பிரம்மாண்டமான 146 அடி முத்து மலை முருகனை காண சேலம் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தமிழகத்தில் உள்ள ஆறுபடை முருகனை மிஞ்சும் வகையிலும், மலேசியாவில் உள்ள முருகனை விட 6 அடி அதிக உயரம் பெற்று வலது கரம் ஆசிர்வாதம் செய்வது போலவும், மேனி தங்கத்தால் கவசம் சாத்தப்பட்டு பஞ்சவர்ண ஆடையில் கம்பீரமாய்  உலகத்திலேயே மிக உயரமான 146 அடி முத்துமலை முருகன் சுவாமி காட்சி  தருகிறார் என்ற சிறப்பையும் பெற்றது குறிப்பிடதக்கது.

இதில் தருமாபுரம் ஆதினம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக புனித நீர் ஹெலிகாப்டர் மூலம் பக்தர்களுக்கு தெளித்தனர். சேலம் மாவட்டத்தில் எதிர்பார்க்காத அளவில் மக்கள் கூட்டம் அலை மோதியது. இதனால் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலை அரைமணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம், ஆத்தூர் கோட்டாட்சியர் சா.சரண்யா, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பார் ஸ்ரீஅபிநவ் உள்ளிட்ட அலுவலர்கள், அரசியல் பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் லட்சகணக்கில் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!