முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ. 270.15 கோடியில் புதிய குடியிருப்புகள் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் : பயனாளிகளுக்கு கிரைய பத்திரங்களையும் வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 10 ஜூன் 2022      தமிழகம்
CM-2 2022 06 10

Source: provided

சென்னை : தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.270.15 கோடி மதிப்பீட்டில் 9 திட்டப்பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 2707 அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், 4,880 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளையும், தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 23,826 பயனாளிகளுக்கு தலா ரூ.2.10 லட்சம் வீதம் ரூ.500 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டிலான பணி ஆணைகளையும், 938 பயனாளிகளுக்கு குடியிருப்புகள் மற்றும் மனைகளுக்கான கிரையப் பத்திரங்களையும் வழங்கினார்.

அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், சென்னையில் உள்ள ஆலையம்மன் கோயில் பகுதி – I திட்டப்பகுதியில் சிதிலமடைந்த பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு ரூ. 41.20 கோடி மதிப்பீட்டில்  தூண் தளம் மற்றும் 9 தளங்களுடன் 324 புதிய குடியிருப்புகள்,  ஆர்-3 காவல் நிலையம் திட்டப்பகுதியில் சிதிலமடைந்த பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு ரூ. 10.44 கோடி மதிப்பீட்டில் தூண் தளம் மற்றும் 4 தளங்களுடன் 80 புதிய குடியிருப்புகள்; வியாசர்பாடி டி.டி பிளாக் திட்டப்பகுதியில்   சிதிலமடைந்த பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு ரூ. 60.60 கோடி மதிப்பீட்டில் தூண் தளம் மற்றும் 13 தளங்களுடன் 468 புதிய குடியிருப்புகள்,

திருச்சிராப்பள்ளி மாவட்டம், கல்மந்தை திட்டப்பகுதியில் சிதிலமடைந்த பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு  ரூ.15.60 கோடி மதிப்பீட்டில் தரைதளம் மற்றும் 3 தளங்களுடன் 192 புதிய குடியிருப்புகள், அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் திட்டப்பகுதியில் ரூ. 48.98 கோடி மதிப்பீட்டில் தரைதளம் மற்றும் 3 தளங்களுடன் 576 புதிய குடியிருப்புகள், தேனி மாவட்டம், வடவீரநாயக்கன்பட்டி பகுதி-2 திட்டப்பகுதியில் ரூ. 16.33 கோடி மதிப்பீட்டில் 175 தரைதள இரட்டை குடியிருப்புகள், திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டி பகுதி – I திட்டப்பகுதியில் ரூ.41.63 கோடி மதிப்பீட்டில் தரைதளம் மற்றும் 3 தளங்களுடன் 480 புதிய குடியிருப்புகள், 

நாமக்கல் மாவட்டம், அணைப்பளையம் திட்டப்பகுதியில் தரைதளம் மற்றும் 3 தளங்களுடன் ரூ.18.01 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 208 புதிய குடியிருப்புகள், நீலகிரி மாவட்டம், கடசனக்கொல்லி திட்டப்பகுதியில் ரூ.17.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 204 தனி வீடுகள் என மொத்தம் ரூ.270.15 கோடி மதிப்பீட்டிலான தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் புதிய குடியிருப்புகளை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்.

முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ள 9 திட்டப்பகுதிகளில் 400 சதுர அடி பரப்பளவுக்கு குறையாமல் ஒவ்வொரு குடியிருப்புகளும் அமைந்துள்ளது.  இக்குடியிருப்புகள் ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிவறை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.  அனைத்து குடியிருப்பு வளாகங்களிலும் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீரேற்று வசதி, மின் தூக்கிகள், சிறுவர் பூங்கா, மின்னாக்கிகள்  மற்றும் தீயணைப்பு வசதிகள் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும்,  நம் குடியிருப்பு நம் பொறுப்பு திட்டத்தின் கீழ் அனைத்து திட்டப்பகுதிகளிலும் குடியிருப்போர் நலச்சங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து, 4,880 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளையும், தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களிலுள்ள 761  பகுதிகளில் வசிக்கும் 23,826 பயனாளிகளுக்கு தனி வீடுகள் கட்ட தலா ரூ.2.10 லட்சம் வீதம் ரூ.500 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டிலான பணி ஆணைகளையும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான 718 கிரையப் பத்திரங்களும், மனைகளுக்கான 220 கிரையப் பத்திரங்களும், என 938 பயனாளிகளுக்கு கிரையப் பத்திரங்களையும் முதல்வர் வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில், தலைமைச்செயலகத்திலிருந்து அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச்செயலாளர்  வெ.இறையன்பு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித்துறை முதன்மைச்செயலாளர் ஹிதேஸ்குமார் எஸ்.மக்வானா, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் கோவிந்தராவ், திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக  சட்டமன்ற பேரவைத்தலைவர் அப்பாவு, நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வாகப், திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் விஷ்ணு, திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம். சரவணன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரியலூர் மாவட்டத்திலிருந்து அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து