முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிரியர் பணி நியமன முறைகேடு: நடிகை அர்பிதா முகர்ஜி வீட்டில் மேலும் ரூ.29 கோடி பறிமுதல்

வியாழக்கிழமை, 28 ஜூலை 2022      இந்தியா
arpitha-mugarji---------2022-07-28

Source: provided

கொல்கத்தா: ஆசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட மேற்கு வங்காள மாநில வணிகம் மற்றும் தொழில் துறை மந்திரி்க்கு நெருக்கமான நடிகை அர்பிதா முகர்ஜியின் மற்றொரு வீட்டில் மேலும் ரூ.29 கோடியை அமலாக்கத்துறையின் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணையில் நடிகை அர்பிதா முகர்ஜி பல தகவல்களை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்கு வங்காள மாநில வணிகம் மற்றும் தொழில் துறை மந்திரியாக இருக்கும் பார்த்தா சட்டர்ஜி கடந்த 2014-ம் ஆண்டு வரை கல்வித்துறை மந்திரியாக செயல்பட்டார். அப்போது அவர் ஆசிரியர் பணி நியமன முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் குற்றச்சாட்டு எழுந்ததால் அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகிறது. 

கடந்த 22-ந்தேதி மந்திரி பார்த்தா சட்டர்ஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அதேபோல் தெற்கு கொல்கத்தாவில் அவரது உதவியாளரும், நடிகையுமான அர்பிதா முகர்ஜி வீட்டிலும் சோதனை நடத்தினர். அங்கு ரூ.2 ஆயிரம், ரூ.500 என ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக மலைபோல குவிந்து கிடந்தது. அர்பிதா முகர்ஜி வீட்டில் ரூ.20 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 

இதற்கிடையே மந்திரி பார்த்தா சட்டர்ஜி மற்றும் அர்பிதா முகர்ஜியை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதையடுத்து கொல்கத்தா அமலாக்கத்துறை அலுவலகத்தில் மந்திரி பார்த்தா சட்டர்ஜி, அர்பிதா முகர்ஜி ஆகியோரிடம் விசாரணையை தொடங்கினர். 

இந்நிலையில் நடிகை அர்பிதா முகர்ஜியின் இன்னொரு வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். கொல்கத்தாவில் பெல்காரியா பகுதியில் உள்ள அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான வீட்டை அதிகாரிகள் திறந்து ஒவ்வொரு அறையாக சோதனை செய்தனர். அங்கும் கட்டுக்கட்டாக பணம் குவிந்து கிடந்தது. ஏற்கனவே ரூ.20 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வீட்டில் இருந்தது போலவே இந்த வீட்டிலும் 2000, 500 ரூபாய் நோட்டுகள் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. மேலும் தங்க கட்டிகளும் இந்தது. 

இதையடுத்து பணம் எண்ணும் எந்திரங்களை எடுத்து வருமாறு வங்கி அதிகாரிகளை கேட்டுக்கொண்டனர். பின்னர் வீட்டில் இருந்த பணத்தை எண்ணும் பணி தொடங்கியது. இப்பணி விடிய விடிய நடந்தது. இதில் சுமார் ரூ.29 கோடி இருப்பது தெரிய வந்தது. இந்த பணத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் 5 கிலோ தங்க நகைகளும் சிக்கியது. சுமார் 18 மணிநேரம் நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ரூ.29 கோடி பணம் 10 பெட்டிகளில் வைக்கப்பட்டன. அந்த பெட்டிகளுடன் நேற்று அதிகாலை அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர். 

தங்க நகைகளும் முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. ஏற்கனவே நடந்த சோதனையில் ரூ.21 கோடி சிக்கியபோது அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் தற்போது மேலும் ரூ.29 கோடி பணம் குவிக்கப்பட்டு இருப்பதை கண்டு திகைத்துவிட்டனர். அர்பிதா முகர்ஜியின் இரண்டு வீட்டில் இருந்தும் ரூ.50 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் அர்பிதா முகர்ஜி வீட்டில் நடந்த சோதனையில் டைரி ஒன்று சிக்கியது. அதில் முக்கிய தகவல்கள் உள்ளது என்றும் அதன் மூலம் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப் படுகிறது. 

இதற்கிடையே அமலாக்கத்துறை விசாரணையில் நடிகை அர்பிதா முகர்ஜி பல்வேறு தகவல்களை தெரிவித்தார். அவர் அதிகாரிகளிடம் கூறியதாவது:- 2016-ம் ஆண்டு பெங்காலி நடிகர் மூலம் மந்திரி பார்த்தா சட்டர்ஜி எனக்கு அறிமுகமானார். எனது வீட்டிலுள்ள அறையில் அவர் பணத்தை பதுக்கி வைத்து இருந்தார். இது அவர் வாங்கிய லஞ்ச பணமாக இருக்கலாம். அவர் நேரடியாக அந்த பணத்தை வாங்கவில்லை. உதவியாளர்கள் மூலம் அந்த பணத்தை அவர் பெற்றார் என கருதுகிறேன். 

சட்ட விரோதமாக பெறப்பட்ட பணத்தை அவர் எனது வீட்டில் வைத்து இருந்தார். அந்த அறையில் எவ்வளவு பணம் இருந்தது என்று எனக்கு தெரியாது. வாரத்துக்கு ஒரு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை அவர் எனது வீட்டுக்கு வருவார். அவருக்கு நெருக்கமான பெண் ஒருவரும் வருவார். மேலும் மந்திரிக்கு நெருக்கமானவர்களும் வருவார்கள். அந்த அறையில் என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியாது 

எனது வீட்டையும், இன்னொரு பெண்ணின் வீட்டையும் மந்திரி பார்த்தா சட்டர்ஜி மினி வங்கி போல பயன்படுத்தி வந்தார். பணத்தை எப்போதும் மற்றவர்கள் தான் கொண்டு வருவார்கள். அந்த அறைகளில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது குறித்து மந்திரி ஒரு போதும் என்னிடம் கூறியது இல்லை. இவ்வாறு அர்பிதா முகர்ஜி வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து