முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மூணாறு அருகே மீண்டும் நிலச்சரிவு: 2 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2022      இந்தியா
Munnar 2022-08-07

Source: provided

திருவனந்தபுரம் : மூணாறு அருகே புதுக்குடியில் கடந்த வெள்ளிக் கிழமை நள்ளிரவு நிலச்சரிவு ஏற்பட்ட அதே இடத்தில் நேற்று அதிகாலை மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 2 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. 

கேரளாவில் கடந்த சில வாரங்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்ததால் முல்லை பெரியாறு, இடுக்கி உள்பட அணைகள் வேகமாக நிரம்பின. இதைத் தொடர்ந்து முல்லை பெரியாறு அணை கடந்த வெள்ளிக் கிழமை திறக்கப்பட்டது.

இந்த நிலையில் மூணாறு அருகே கண்டலா புதுக்குடி பகுதியில் வெள்ளிக் கிழமை நள்ளிரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 2 கடைகள், ஒரு கோயில் மற்றும் ஒரு ஆட்டோ மண்ணுக்குள் புதைந்தன. நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு மிக அருகே தமிழக தோட்ட தொழிலாளர்கள் சுமார் 175 குடும்பத்தை சேர்ந்த 450-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்கள் அனைவரும் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர். 

அங்குள்ள மலையின் ஒரு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இது திசை மாறியிருந்தால் தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வந்த பெரும்பாலானோர் மண்ணுக்கடியில் புதைந்திருக்க கூடும். அதிர்ஷ்டவசமாக பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த நிலச்சரிவு காரணமாக மூணாறு - வட்டவடா நெடுஞ்சாலை சேதமடைந்தது. இதனால் நேற்று முன்தினம் பல மணி நேரம் இந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை அதே பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 2 வீடுகள் மண்ணுக்கடியில் புதைந்தன. வெள்ளியன்று நிலச்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து மாற்றப்பட்டதால் நேற்று உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இது குறித்து அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து