முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் ஐ.பி.எல்.: அணியின் பெயரை அறிவித்தது அதானி நிறுவனம்

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2023      விளையாட்டு
26-Ram-58-1-

Source: provided

பிசிசிஐ சார்பில் ஆடவருக்கு என ஐபிஎல் போட்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. இத்தொடர் உலகின் பணம் கொழிக்கும் போட்டியாக திகழ்கிறது. இதில் பங்கேற்று ஆட பல்வேறு வெளிநாட்டு வீரர்களும் தீவிர ஆர்வம் காண்பிக்கின்றனர். முதன்முதலாக மகளிர் ப்ரீமியர் லீக் (டபிள்யுபிஎல்) போட்டியை நடத்த பிசிசிஐ தீர்மானித்துள்ளது. மொத்தம் 5 அணிகள் இதில் இடம் பெறுகின்றன. இந்த அணிகளின் ஏலம் மூலம் பிசிசிஐக்கு ரூ.4,670 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அதன் செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார். கடந்த 2008-இல் ஆடவர் ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட போது கிடைத்த தொகையை விட இது அதிகம் ஆகும்.

டபிள்யூபிஎல் அணிகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டது. மும்பையில் நடைபெற்ற ஏலத்தின் முடிவில் 2023 டபிள்யூபிஎல் போட்டியில் ஆமதாபாத், மும்பை, பெங்களூரு, தில்லி, லக்னெள ஆகிய நகரங்களை முன்னிலைப்படுத்தும் அணிகள் போட்டியிடுகின்றன. ஆமதாபாத் அணியை அதானி நிறுவனம் ரூ. 1,289 கோடிக்கு வாங்கியது. இந்நிலையில் டபிள்யூபிஎல் போட்டியில் ஆமதாபாத் நகரை முன்னிலைப்படுத்தும் அணி, குஜராத் ஜெயண்ட்ஸ் (Gujarat Giants) என அழைக்கப்படவுள்ளதாக அதானி ஸ்போர்ட்ஸ்லைன் நிறுவனம் அறிவித்துள்ளது. 

____________

ஆஸ்திரேலிய ஓபன் இறுதிக்கு 

ரைபகினா, சபலெங்கா தகுதி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில், நடப்பு விம்பிள்டன் சாம்பியனான கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபகினா, பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா மோதினர். இப்போட்டியில் 7-6 (4), 6-3 என்ற செட்கணக்கில் ரைபகினா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டாவது முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார் ரைபகினா.

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் பெலாரஸ் நாட்டின் அரினா சபலெங்கா, 7-6, 6-2 என்ற செட்கணக்கில் போலந்தின் மட்கா லினட்டை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டி சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதில், எலெனா ரைபகினா, 5ம் தரநிலை வீராங்கனையான அரினா சபலெங்காவுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார். 

________________

ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட்:

தமிழ்நாடு அணி 133 ரன்கள்

தமிழ்நாடு - செளராஷ்டிர அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செவ்வாயன்று தொடங்கியது. செளராஷ்டிர அணியின் கேப்டனாக ஜடேஜா செயல்படுகிறார். தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 142.4 ஓவர்களில் 324 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திரஜித் 66, விஜய் சங்கர் 53, ஷாருக் கான் 50 ரன்கள் எடுத்தார்கள். காயத்திலிருந்து மீண்டு வந்து முதல்தர கிரிக்கெட்டில் விளையாடும் ஜடேஜா, 24 ஓவர்கள் வீசி 48 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். யுவ்ராஜ்சிங் 4, டிஏ ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். 

3-ம் நாளான நேற்று செளராஷ்டிர அணி முதல் இன்னிங்ஸில் 192 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 6-ம் நிலை வீரராகக் களமிறங்கிய ஜடேஜா, 15 ரன்களுக்கு அபரஜித் பந்தில் ஆட்டமிழந்தார். தமிழக அணியின் எம். சித்தார்த், அஜித் ராம் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 132 ரன்கள் முன்னிலை பெற்றது.  தமிழ்நாடு அணி 2-வது இன்னிங்ஸில் ஜடேஜாவின் சுழலில் 36.1 ஓவர்களில் 133 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

_________________

பாகிஸ்தான் கேப்டனுக்கு 

ஐ.சி.சி.யின் இரு விருதுகள்

2022-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் தேர்வாகியுள்ளார். மேலும், கடந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராகவும் அவர் தேர்வாகியுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.2022-ம் வருடம் அனைத்து வகை போட்டிகளிலும் 2000 ரன்கள் எடுத்த ஒரே வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் பாபர் ஆஸம். 44 ஆட்டங்களில் 2598 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி - 54.12. 2022-ல் மட்டும் 8 சதங்களும் 17 அரை சதங்களும் எடுத்துள்ளார். 

2021-ல் சிறந்த ஒருநாள் வீரராகத் தேர்வான பாபர் ஆஸம், 2022-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரராகவும் ஐசிசியால் அறிவிக்கப்பட்டுள்ளார். 9 ஆட்டங்களில் 679 ரன்கள் எடுத்தார். இதனால் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.  இந்நிலையில் வருடம் முழுக்க சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால், 2022-ம் ஆண்டுக்கான சிறந்த வீரராகவும் பாபர் ஆஸம் தேர்வாகியுள்ளார். இதையடுத்து சோபர்ஸ் கோப்பை அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

________________

ஐசிசி 2022-ம் ஆண்டுக்கான சிறந்த 

டெஸ்ட் வீரராக பென் ஸ்டோக்ஸ்

பென் ஸ்டோக்ஸ் 2022-ஆம் ஆண்டின் ஐசிசியின் சிறந்த டெஸ்ட் வீரர் என அறிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 2022 -ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் பென் ஸ்டோக்ஸ் 870 ரன்கள் குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 36.25 ஆகும். அவரது ஸ்டிரைக் ரேட் 71.21 ஆகும். அவர் கடந்த ஆண்டு இரண்டு சதங்களை விளாசியுள்ளார். 

அதில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அவர் அடித்த 103 ரன்கள் சிறப்பானதாகும். அதே போட்டியில் அவர் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். அந்த தொடர் முழுவதையும் சேர்த்து அவர் 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இருப்பினும், அவர் 2022-ஆம் ஆண்டு முழுவதிலும் டெஸ்ட் போட்டிகளில் வெறும் 26 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் பென் ஸ்டோக்ஸ் ஏலம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

________________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து