முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோட்டில் பறக்கும் படையினர் சோதனை: ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2 லட்சத்து 86 ஆயிரம் பறிமுதல்

திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2023      தமிழகம்
Erode 2023 01 22

Source: provided

ஈரோடு : ஈரோட்டில் பறக்கும் படையினரின் சோதனையில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2 லட்சத்து 86 ஆயிரம் பணம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. 

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 18-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அறிவிப்பு வெளியான மறு நிமிடமே ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன. 

ரூ.50,000-க்கு மேல் ரொக்கப் பணம், 10 ஆயிரத்து ரூபாய்க்கு மேல் பரிசுப் பொருட்கள் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

4 நிலை கண்காணிப்பு குழுவினர், 3 பறக்கும் படையினர் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் இணைந்து போலீசாரும் சோதனை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று காலை ஈரோடு மரப்பாலம் அருகே கள்ளுக்கடை மேடு பகுதியில் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் ருத்ரமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் ரூ. ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 500 இருந்தது. அந்த பணத்திற்குரிய ஆவணங்கள் இல்லை. இது குறித்து காரில் வந்த நபரிடம விசாரித்த போது அவர் ஈரோடு கே.கே.நகர் பகுதியை சேர்ந்த தேவகுமார் என்பதும், கள்ளுக்கடை மேடு பகுதியில் சொந்தமாக எலக்ட்ரிக் கடை வைத்திருப்பதும் தெரிய வந்தது. 

அவரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்த நிலை கண்காணிப்பு குழுவினர் அந்த பணத்தை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர். பணத்திற்குரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்று செல்லுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதேபோல் ஈரோடு ஜி.எச். ரவுண்டானா பகுதியில் பறக்கும் படை அதிகாரி மெய்யப்பன் தலைமையில் குழுவினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் சோதனை செய்தபோது ரூ.ஒரு லட்சத்து 40ஆயிரத்து 500 இருந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் அப்புக்குட்டி என்பதும் மருந்து விற்பனை பிரதிநிதி என்பதும் தெரிய வந்தது. பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்தனர். நேற்று ஒரே நாளில் ரூ.2 லட்சத்து 86 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து