முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் ரூ. 128 கோடியில் தொழிற்சாலையை நிறுவும் ஜப்பானின் ஓம்ரான் நிறுவனம் : முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

செவ்வாய்க்கிழமை, 30 மே 2023      தமிழகம்
CM-2 2023-05-30

Source: provided

சென்னை : ஜப்பான் நாட்டின் முன்னணி நிறுவனமான ஓம்ரான் ஹேல்த்கேர் நிறுவனம் இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் ரூ.128 கோடி முதலீட்டில் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு தொழிற்சாலை நிறுவிட முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு மேற்கொள்ளப்பட்டது.

ஜப்பானை சேர்ந்த ஓம்ரான் (OMRON) நிறுவனம், தொழில்துறை ஆட்டோமேஷன், ஹெல்த்கேர், மின்னணு பாகங்கள் தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது, ஓம்ரான் நிறுவனம் சுமார் 120 நாடுகளுக்கு தனது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கி வருகிறது.

ஓம்ரான் கார்பரேஷனின் ஒரு பிரிவான ஓம்ரான் ஹெல்த்கேர் நிறுவனம், டிஜிட்டல் இரத்த அழுத்த மானிட்டர்கள், சுவாச சிகிச்சைக்கான நெபுலைசர்கள் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்வதில் உலகளவில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது. மேலும், இந்நிறுவனம், குறைந்த அதிர்வெண் வலி சிகிச்சை உபகரணங்கள், மின்னணு வெப்பமானிகள், உடல் அமைப்பு மானிட்டர்கள் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்நிறுவனம் தமிழகத்தில் மருத்துவச் உபகரணங்களை தயாரிக்கும் வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்  முன்னிலையில் நேற்று மாலை டோக்கியோவில், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், ஓம்ரான் ஹெல்த்கேர் நிறுவனத்திற்கும் இடையே,  128 கோடி ரூபாய் முதலீட்டில் தானியங்கி இரத்த அழுத்த மானிட்டர்களுக்கான உற்பத்தி தொழிற்சாலையை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 

இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், உலகின் முன்னணி நிறுவனமான ஜப்பான் நாட்டை சேர்ந்த ஓம்ரான் ஹெல்த்கேர் நிறுவனம் இந்தியாவின் முதல் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி தொழிற்சாலையை தமிழ்நாட்டில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.  

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், 

ஓம்ரான் நிறுவனத்தின் முதலீடு, தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழ்நிலை மீதான தங்களின் நம்பிக்கையை மட்டுமின்றி, வெற்றிகரமான அதன் மருத்துவ கட்டமைப்பின் மீதான உங்கள் நம்பிக்கையையும் எடுத்துக் காட்டுவதாக உள்ளது. 

தமிழ்நாடு சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. எளிதில் கிடைக்கக்கூடிய தரமான மருத்துவ சேவைகளை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. மருத்துவத் துறைக்கான உற்பத்தி தொழிலை தொடங்குவதன் மூலம் எங்கள் மாநிலத்தின் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் ஓம்ரான் நிறுவனம் முக்கிய பங்காற்ற இருக்கிறது. தங்களது முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகள் என்று தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  கிருஷ்ணன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் விஷ்ணு, ஓம்ரான் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் அயுமு ஒகடா, செயல் அலுவலர் கசுகோ குரியாமா, ஓம்ரான் ஹெல்த்கேர் தயாரிப்பு நிறுவனம் (வியட்நாம்) தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் டாகுடோ இவானகா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து