முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை இன்று ஆய்வு செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

வியாழக்கிழமை, 8 ஜூன் 2023      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

திருச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூரிலிருந்து இன்று காலை புறப்பட்டு வல்லம் ஆலக்குடியில் முதலைமுத்துவாரி ஆற்றில் நடந்து வரும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்கிறார். முதல்வர் வருகையை முன்னிட்டு திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைக்க உள்ளார். முன்னதாக டெல்டா மாவட்டங்களின் கடைமடை வரை முழுமையாக தண்ணீர் சென்று சேரும் வகையில் வாய்க்கால்கள் முழுமையாக தூர்வாரும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக ரூ.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகளை கண்காணிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாவட்டந்தோறும் கண்காணிப்பு அலுவலர்களாக அரசு நியமித்துள்ளது. குறுவை நெல் சாகுபடி தொடங்க உள்ள நிலையில் கடைமடை பகுதி வரை தண்ணீர் சென்று சேரவேண்டும் என்பதற்காக இந்த பணிகள் வேகமெடுத்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க இன்னும் 4 நாட்களே உள்ளதால் பணிகள் மும்முரமாக நடக்கிறது.

அவ்வாறு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (9-ம் தேதி) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். தஞ்சாவூரிலிருந்து இன்று காலை புறப்பட்டு வல்லம் ஆலக்குடியில் முதலைமுத்துவாரி ஆற்றில் நடந்து வரும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்கிறார். தொடர்ந்து விண்ணமங்கலம் பகுதியில் தூர்வாரப்பட்டுள்ள 'சி' மற்றும் 'டி' பிரிவு வாய்க்கால்களை ஆய்வு செய்கிறார். பின்னர் அங்கிருந்து பூண்டி வழியாக திருச்சி மாவட்ட எல்லையா செங்கரையூர் பகுதிக்கு வருகை தருகிறார். அங்கு தி.மு.க.வினர் முதலமைச்சரை வரவவேற்கிறார்கள்.

இதையடுத்து திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்து புள்ளம்பாடியில் கூழையாற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிடுகிறார். பின்னர் நத்தம், வெங்கடாசலபுரம் வழியாக இருதயபுரத்தில் நந்தியாற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணியை ஆய்வு செய்கிறார்.

பின்னர் சமயபுரம், கொள்ளிடம் வழியாக திருச்சியை வந்தடைகிறார். அங்கு பிற்பகல் 2.45 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்படுகிறார். முன்னதாக விமான நிலையத்தில் தூர்வாரும் பணிகள் தொடர்பாக நிருபர்களுக்கு பேட்டி அளிக்க உள்ளார். முதல்வர் வருகையை முன்னிட்டு திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் முதல்வர் பயணம் செய்யும் வழிகளிலும், தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்யும் பகுதிகளிலும் டிரோன்கள் பறக்க இன்று தடை விதித்து திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து