முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்களுக்கு பார்லி., சட்டமன்றங்களில் 33 சதவீத ஒதுக்கீடு வழங்கும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம் : மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகே மசோதா அமலுக்கு வரும்

புதன்கிழமை, 20 செப்டம்பர் 2023      இந்தியா
Parliament 2023 05 27

Source: provided

புதுடெல்லி : மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நேற்று பாராளுமன்றத்தில்  நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 454 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் பதிவாகின. இதன் மூலம் பாராளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மசோதா வழிவகை செய்யும். எனினும் இந்த மசோதா மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகே அமலுக்கு வரும் என தெரிகிறது.

மசோதா தாக்கல்....

பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த 3 நாட்களுக்கு முன் தொடங்கியது. பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் இருந்து புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கு பாராளுமன்ற கூட்டத்தொடர் நேற்று முன்தினம் இடம்பெயர்ந்தது. புதிய பாராளுமன்றத்தின் முதல் அலுவலாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால், மசோதாவை தாக்கல் செய்தார்.

15 ஆண்டுகளுக்கு... 

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, 15 ஆண்டுகளுக்கு மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்கிறது. பெண்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு அளிக்கப்படும். மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

எதிர்க்கட்சிகள்... 

முன்னதாக மசோதா மீது மக்களவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. மசோதாவை விரைவாக சட்டமாக்கி, வரும் பாராளுமன்றத் தேர்தலில் அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தி உள்ளனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் எம்பி ரஞ்சீத் ரஞ்சன் கூறும்போது, "இந்த மசோதாவை நாங்கள் வரவேற்கிறோம். மகளிர் இட ஒதுக்கீடு தேவை என்பதை காங்கிரஸ் தொடர்ந்து கூறி வருகிறது. மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை கடந்த 2010ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி மாநிலங்களவையில் நாங்கள் நிறைவேற்றினோம். ஆனால், மக்களவையில் நிறைவேறாததால் மசோதா சட்டமாகவில்லை. பாஜக உண்மையாகவே இந்த மசோதாவை விரும்பி இருந்தால், 2021-ம் ஆண்டே மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி இருப்பார்கள் என்றார்.

எப்போது அமல்....

திமுக மக்களவை எம்.பி கனிமொழி பேசும்போது, “இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இது எப்போது அமலுக்கு வரும் என்பது இன்னும் தெரியவில்லை. இந்த மசோதாவை 2024 பாராளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு பாஜக கொண்டு வந்திருப்பதாகவே புரிந்து கொள்ள முடிகிறது” என்றார். 

13 ஆண்டுகளாக.... 

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பேசும்போது, “இந்த மசோதா நிறைவேறுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். அதேநேரத்தில், காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஆட்சிக் காலத்தில் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. அவ்வாறு நிறைவேற்றப்பட்டு 13 ஆண்டுகளாக இந்திய பெண்கள் காத்திருக்கிறார்கள். இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குக் காத்திருப்பது? இந்திய பெண்களை இவ்வாறு காத்திருக்க வைப்பது சரியா? இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும். அதேநேரத்தில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதன் அடிப்படையில் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி. சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

வாக்கெடுப்பு... 

விவாதங்களுக்கு பிறகு, மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. எம்.பி.க்களுக்கு வாக்குச்சீட்டு அளிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 454 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் பதிவாகின. இதன் மூலம் மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.  பாராளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மசோதா வழிவகை செய்யும். வாக்கு சீட்டின் மூலம் நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரதமர் மோடியும் பங்கேற்றார்.

கடந்து வந்த பாதை: 

கடந்த 1996-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் தேவகவுடா தலைமையிலான ஆட்சியின்போது முதல்முறையாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் மசோதா தோல்வி அடைந்ததால் பாராளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. அதே ஆண்டு மக்களவை கலைக்கப்பட்டதால் மசோதா காலாவதியானது. 1998-ல் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதும் போதிய ஆதரவு இல்லாததால் மசோதா காலாவதியானது. கடந்த 1999, 2002, 2003-ம் ஆண்டுகளில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறாமல் போனது. கடந்த 2010-ல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்கள வையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்களவையில் நிறைவேற்ற முடியவில்லை. சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற தீவிரம் காட்டப்படுகிறது.

2029-ல் அமலுக்கு வரும்..?

தற்போதைய நிலையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டாலும் உடனடியாக சட்டமாக ஆகாது. நாடு முழுவதும் தொகுதி மறுவரையறை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு, அதன் பிறகே இந்தச் சட்டம் அமலுக்கு வரும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்த மசோதா குறைந்தபட்சம் 2029 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்தான் அமலுக்கு வரும் என சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மசோதாவுக்கு நாடு முழுவதும் உள்ள சட்டப்பேரவைகளில் 50 சதவீத சட்டப்பேரவைகள் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வேண்டும் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 3 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 2 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து